Header Ads

  • Breaking News

    சோகங்களை சந்தித்த ஜோ பைடன்


    அமெரிக்க தேர்தல் முடிந்துள்ள நிலையில் இந்த வெற்றி தம்மை கௌரவித்திருப்பதாகவும், பணிவுகொள்ள வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ள பைடன், அதிக தடைகள் ஏற்பட்ட நிலையிலும் முன்பி;ல்லாத அளவில் மக்கள் திரண்டு வாக்களித்திருப்பது அமெரிக்கர்களின் மனதில் ஜனநாயகம் இருக்கிறது என்பதைக் காட்டுகிறது என்றும் கூறினார்.

    எனவே கோபத்தையும், ஆவேச உரைகளையும் நிறுத்திவிட்டு ஒரு நாடாக ஒன்று சேரவேண்டிய நேரம் இதுவாகும். வாக்கு எண்ணிக்கையில் ஏற்பட்ட தாமதத்துக்கு காரணம் கொரோனா தொற்று நிலைமையினால் மில்லியன் கணக்கான வாக்காளர்கள் அஞ்சல் மூலம் வாக்குகளை செலுத்தியதே ஆகும் என்றும் ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளார்.

    ஏற்றமும் இறக்கமுமாக இருந்த வாக்கு எண்ணிக்கை முடிவுகளில் ஒரு கட்டத்தில் பைடன் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகரித்திருந்தது.

    வெற்றி தோல்விகளைத் தீர்மானிக்கும் மாநிலங்களில் படிப்படியாக முன்னிலை பெற்ற ஜோ பைடனுக்கு 1900 ஆம் ஆண்டுக்குப் பிறகு அதிக சதவீத வாக்காளர்கள் வாக்களித்திருந்தது என்பது வரலாறு காணாத வெற்றியாகும்.
    இந்த தேர்தலில் பைடன் அவர்களுக்கு 74 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகள் கிடைத்துள்ளது. இதுவரை எந்த அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளரும் பெற்றிராத வாக்கு எண்ணிக்கை இதுவாகும்.

    இம்முறை மூன்றாவது தடவையாக ஜனாதிபதியாகும் முயற்சியில் வெற்றி பெற்ற பைடன் கடந்த 50 ஆண்டுகளாக ஜனாதிபதியாகும் கனவைக் கொண்டிருந்த இவர், இதற்கு முன்பாக இரண்டு முறை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
    தமது சொந்த மாநிலமான டெலாவேரில் இருந்து 1972 ஆம் ஆண்டு செனட்டராக தேர்ந்தெடுக்கப்பட்ட பைடனுக்கு நடந்த ஒரு கார் விபத்தில் அவர் தனது முதல் மனைவி நெய்லியா மற்றும் பெண் குழந்தை நவோமி ஆகியோரை இழந்தார். இந்த விபத்தில் உயிர் தப்பிய தமது மகன்கள் பியூ, ஹன்டர் சிகிச்சை பெற்றுவந்த மருத்துவமனை அறையில் இருந்து கொண்டே அவர் தமது முதல் செனட்டர் பதவிக்காலத்துக்கான பதவியேற்பு உறுதிமொழியை எடுத்துக்கொண்டார். மேலும் மொத்தமாக ஆறு முறை செனட்டராக தேர்வு செய்யப்பட்டார்.

    1988 ஆம் ஆண்டு ஜனாதிபதி பதவிக்கான போட்டியில் பிரிட்டன் தொழிலாளர் கட்சித் தலைவரின் பேச்சை அப்படியே நகலில் பேசியதாக அவரே ஒப்புக்கொண்டு ஜனாதிபதி பதவிக்கான போட்டியில் இருந்து விலகினார்.

    அதனை தொடர்ந்து நீண்ட தண்டனைக் காலத்தையும், பலரை ஒன்றாக சிறையில் அடைப்பதையும் ஊக்குவித்ததாக இடதுசாரிகளால் குற்றம் சுமத்தப்பட்ட அவர் 1994 ஆம் ஆண்டின் ஆன்டி கிரைம் மசோதாவை தீவிரமாக ஆதரித்தார்.

    பிறகு 2008 ஆம் ஆண்டு ஜனநாயக கட்சியின் சார்பில் வேட்பாளர் ஆவதற்கு முயற்சி செய்து பின்பு அவரே அந்தப் போட்டியில் இருந்து விலகி ஒபாமாவின் துணை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்படுவதை ஏற்றுக்கொண்டார்.

    ஒபாமா ஆட்சியில் 8 ஆண்டு காலம் துணை ஜனாதிபதி இருந்ததன் மூலம் மரபு உரிமை கோர பைடனுக்கு உதவியாக இருந்தது.
    2015 ஆம் ஆண்டு அவரது மகன் பியூ மூளை புற்று நோயால் 46 ஆவது வயதில் இறந்தார். இதுவே 2016 ஆம் ஆண்டு தாம் ஜனாதிபதி பதவிக்கான போட்டியில் ஈடுபடாததற்கு காரணமாகும் என்று பைடன் கூறியுள்ளார்.

    இந்த கசப்பான அனுபவங்களை தாண்டியே 2020 ஆண்டுக்கான அமெரிக்க ஜனதிபதி தேர்தலில் போட்டியிட்டு இதுவரையில் எந்த அமெரிக்க வேட்பாளர்களும் பெறாத பெரும்பான்மை வாக்குகளை பெற்று வரலாறு காணாத வெற்றியடைந்துள்ளார் ஜோ பைடன் என்பது குறிப்பிடத்தக்கது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad