Header Ads

 • Breaking News

  நீண்ட 47 வருட அரசியல் வாழ்வின் பின் 46 ஆவது அமெரிக்க அதிபராகிறார் ஜோஸப் ரொபினெட் பைடென்!  மெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக வெற்றிவாகை சூடியிருக்கும் ஜோஸப் ரொபினட் பைடெனின் (Joseph Robinette Biden) நீண்ட 47 வருட கால அரசியல் வாழ்க்கை பல ஏற்ற இறக்கங்களைக் கொண்டது.

  நவம்பர் 20, 1942 இல் பென்சில்வேனியாவில் வசதியான குடும்பம் ஒன்றில் பிறந்தவர் பைடென். பல்கலைக்கழகப் பட்டப் படிப்பை முடித்துக் கொண்டு வியட்நாம் யுத்த காலப்பகுதியில் அவர் அமெரிக்க இராணுவத்தில் இணைந்தார். ஆனால் அஸ்மா நோய் காரணமாக சேவையில் இருந்து பின்னர் விலக்கப்பட்டார்.

  பலரதும் ஆச்சரியத்துக்கு மத்தியில் 1972 இல் தனது 30 ஆவது வயதில் Delaware மாநில செனட்டராகத் தெரிவாகினார். அடுத்த சில நாட்களில் – நத்தார் தினத்துக்கு முதல் நாள் – கார் விபத்து ஒன்றில் அவரது முதல் மனைவியும் கைக்குழந்தையான மகளும் உயிரிழக்க நேர்ந்தது. செனட்டராக பதவியேற்கும் நிகழ்வுக்கு அவர் மருத்துவமனையில் இருந்தே வரவேண்டி ஏற்பட்டது. அதேவிபத்தில் படுகாயமடைந்த மற்ற இரண்டு ஆண் பிள்ளைகளையும் வீட்டில் வைத்துப் பராமரிப்பதற்காகத் தனது செனட்டர் பதவியைத் துறக்க விரும்பினார். ஆனால் அன்றைய செனட் குழுத் தலைவரின் வற்புறுத்தலால் பின்னர் அந்த முடிவைக் கைவிட்டார்.

  1970 களில் பெரும்பாலும் வெள்ளை இனப் பிள்ளைகள் கற்கும் பாடசாலைகளுக்குக் கறுப்பினக் குழந்தைகளை அனுப்பிவைப்பதற்காக தனியான பஸ் போக்குவரத்தை(“busing”) அறிமுகம் செய்த அரசின் கொள்கையை பைடென் கடுமையாக எதிர்த்தார்.

  அது கறுப்பினத்தவர்கள் மத்தியில் அவரது செல்வாக்கு வளரக் காரணமாகியது.

  1987 இல் குடியரசுக்கட்சி வெள்ளை மாளிகைக்கான போட்டிக்குள் நுழைந்த போது அக்கட்சியின் சார்பில் அதிபர் பதவிக்குத் தகுதியானோரில் ஒருவராக பைடெனும் இருந்தார். ஆனால் அடுத்தவரது கருத்துக்களைத் திருடி தனது பிரசார உரைகளுக்குப் பயன்படுத்தினார் என்று எழுந்த சர்ச்சை காரணமாக போட்டியிலிருந்து அவர் விலக நேர்ந்தது.பின்னாளில் பிரிட்டிஷ் தொழிற்கட்சியின் தலைவராக விளங்கிய நெய்ல் கின்னொக்கின் (Neil Kinnock) உரையையே ‘கொப்பி அடித்தார்’ என்பதை பைடென் பின்னர் ஒப்புக்கொண்டார்.

  தனது அரசியல் பயணத்தில் 1991 இல் செனட் சபையின் சக்திவாய்ந்த நீதித்துறைக்குழுவின் தலைவரானார் பைடென்.

  செனட்டின் வெளிவிவகாரக் குழுவின் தலைவராக இருந்த சமயம் 2002 ஆம் ஆண்டு ஈராக் போருக்கு அங்கீகாரமளிக்கும் தீர்மானத்தை ஆதரித்தார். அதிபர் சதாம் ஹுசைன் பேரழிவு ஆயுதங்களை மறைத்து வைத்திருக்கிறார் என்று திரட்டப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில் ஈராக் மீது அமெரிக்கா தொடுத்த போரை ஆதரித்த பைடென், பின்னர் சதாமுக்கு எதிரான அந்த சாட்சியங்கள் ஆதாரமற்றவை என்பது தெரியவந்த போது “பின்னோக்கிய பார்வையில் அது ஒரு தவறு” என்று ஒப்புக்கொண்டார்.

  “அமெரிக்க வரலாற்றில் ஒரு சிங்கம்” என்று பைடெனை புகழ்ந்துள்ள பராக் ஒபாமா, 2008 இல் அவரைத் தனது உப ஜனாதிபதி வேட்பாளராக்கிக் கொண்டார். 2009 இல் வெள்ளை மாளிகைக்குள் நுழைந்த ஒபாமாவுக்கு கடைசிவரை அவரது வெற்றிகளுக்கான வலது கரமாகத் திகழ்ந்தவர் பைடென்.

  வெளிவிவகாரம் உட்பட ஒபாமா நிர்வாகத்தின் பல்வேறு முக்கிய அரசியல் தீர்மானங்களுக்கு பைடெனின் அனுபவ ஆலோசனைகள் காரணமாகின.

  ஒபாமாவின் இரண்டு தவணைக்கால ஆட்சிக்குப் பின்னர் 2016 இல் அதிபர் தேர்தலில் களமிறங்குவதற்கு பைடெனுக்கு வாய்ப்பிருந்தது. அமெரிக்க கறுப்பினத்தவர்கள் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் அச்சமயம் அவருக்குப் பரந்தளவு செல்வாக்குக் காணப்பட்டது.ஆனால் தனது மூத்த புதல்வர் மூளைப் புற்றுநோய் காரணமாக உயிரிழக்க நேர்ந்ததால் அச்சமயம் அவரால் அதிபர் தேர்தலில் போட்டியிடமுடியாமற்போனது.

  கடைசியில் “தள்ளாடும் வயோதிபர்”, “தீவிரமான மையவாதி” எனப் பலவிதமான விமர்சனங்களுக்கு முகம் கொடுத்தவாறு இந்தமுறை 2020 தேர்தலில் – தனது 77 ஆவது வயதில்- வெள்ளைமாளிகைக்கான போட்டியில் களமிறங்கினார்.

  அதிபர் ட்ரம்ப் தனது பிரசார மேடைகளில் “தூங்கும் ஜோ” (“Joe the Sleeping “) என்று பைடெனை அடிக்கடிக் கிண்டல் செய்து வந்தார். தனது முதுமை குறித்த ஏளனங்களையெல்லாம் தாங்கிக் கொண்டு இறுதியில் பதவியில் இருந்த அதிபரைத் தோற்கடித்து மிக அதிகப்படியான வாக்குகளுடன் வெள்ளைமாளிகைக்குள் நுழையும் அமெரிக்க அதிபர் என்ற பெருமையைத் தனதாக்கிக்கொண்டார் பைடென்.

  கருத்துகள் இல்லை

  Post Top Ad

  Post Bottom Ad