Ticker

6/recent/ticker-posts

சுதந்திர தினத்தில் ஓய்வு முடிவை அறிவித்த தோனி - ரசிகர்கள் அதிர்ச்சி


1981ம் ஆண்டு ஜூலை 7ம் தேதி பிறந்த மகேந்திர சிங் தோனி சிறு வயதில் கால்பந்து விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். தனது பள்ளியின் கிரிக்கெட் அணிக்கு விக்கெட் கீப்பர் தேவை என பயிற்சியாளர் வற்புறுத்தியதன் காரணமாக தோனியின் கவனம் கிரிக்கெட் பக்கம் திரும்பியது.உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட போதிலும் அவருக்கு தேசிய அணியில் விளையாட வாய்ப்பு கிட்டவில்லை. குடும்ப சூழ்நிலை காரணமாக ரயில்வேயில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றினார். அப்போதும் கிரிக்கெட்டிற்கு முழுக்கு போடாமல் கடுமையாக பயிற்சி செய்து போட்டிகளில் கலக்கிய தோனிக்கு 2004 ஆம் ஆண்டு தேசிய அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது.

தனது அதிரடி ஆட்டத்தால் 38 இன்னிங்சிலேயே ஒரு நாள் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறி  சாதனை படைத்தார். அந்த சாதனை இன்று வரை முறியடிக்கபடாமலேயே இருக்கிறது. தொடர்ந்து தனது தனித்துவமான ஆட்டத்தை வெளிப்படுத்திய தோனிக்கு கிரிக்கெட்டில் ஏறுமுகம் தான்....2007ம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பையில் இந்தியா லீக் சுற்றுடன் வெளியேறி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மூத்த வீரர்கள் மீது கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், அதே ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 20 ஓவர் உலக கோப்பை தொடரில் தோனி  தலைமையில் இந்தியா களமிறங்கி மகுடம் சூடியது..பின்னர் ஒருநாள், டெஸ்ட் மற்றும் 20 ஓவர் வடிவிலான அனைத்து போட்டிகளிலும்  இந்தியாவுக்கு தோனி கேப்டனாக பொறுப்பேற்றார். 2010ல் தோனி தலைமையில் இந்தியா டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றியது.

2011ம் ஆண்டு நடந்த 50 ஓவர் உலக கோப்பையை பெற்று தந்து 28 ஆண்டுகால இந்திய ரசிகர்களின் காத்திருப்பை தகர்த்தார் தோனி. 2013ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மகுடம் சூடி , அனைத்து ஐசிசி தொடர்களையும் வென்றவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார்... தோனி. கிரிக்கெட் களத்தில் நிகழ்த்திய சாதனைகளுக்காக தோனிக்கு கடந்த 2007ம்  ஆண்டு ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதும், 2009ல் பத்ம ஸ்ரீ விருதும் , 2018ல் உயரிய பத்ம பூஷன் விருதும் வழங்கப்பட்டது. 2011ல் சச்சினுக்காக இந்திய வீரர்கள் உலக கோப்பையை பெற்று தந்தது போல் , 2019ல் தோனிக்காக வீரர்கள் சிறப்பாக ஆடி உலக கோப்பையை பெற்று தந்து வழியனுப்பி வைப்பார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர், ஆனால் அரையிறுதியில் நியூசிலாந்து அணியிடம் வீழ்ந்தால் ரசிகர்களின் கனவு சுக்கு நூறாக உடைந்தது.

கிரிக்கெட் களம் கண்டு ஏறக்குறைய ஓர் ஆண்டு நிறைவடைந்த நிலையில் , தோனி தற்போது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். அதுவும் வித்தியாசமான பாணியில் , தனக்கு பிடித்தமான பாடலுடன் , இந்திய அணியில் ஆடிய முதல் ஆட்டத்திலிருந்து பல நினைவுகளை தொகுப்பாக இணைத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். தோனி ஒரு நாள் , டி -20 , டெஸ்ட் போட்டி என 538 போட்டிகளில் விளையாடி, 17 ஆயிரத்து 266 ரன்கள் குவித்துள்ளார். இதில் 16 சதங்கள் அடங்கும்...தோனியின் ஓய்வு முடிவு பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தாலும் , அவரின் துல்லியமான ஸ்டம்பிங்களையும் , அதிரடியான ஆட்டத்தையும் ஐபிஎல்-ல் காண ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர்......