• Breaking News

    ஒலிம்பிக்கில் முதல்தடவையாக அலைச்சறுக்கல் | Trincoinfo


    நவீன ஒலிம்பிக் விளையாட்டு விழா வரலாற்றில் அலைச்சறுக்கல் போட்டி உத்தியோகபூர்வ (பதக்கத்துக்குரியது) விளையாட்டாக அங்கீகாரம் பெறுகின்றது. இப் போட்டி டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் அறிமுகமாகவுள்ளது.
    அடுத்த வருடம் கொடைக்காலத்தில் நடைபெறவுள்ள டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் ஜப்பானை சூழவுள்ள கடற்பகுதியில் அலைச்சறுக்கல் போட்டி நடத்தப்படவுள்ளது.
    பாய்மரப் படகோட்டம், மரதன் நீச்சல் ஆகிய போட்டிகள் நடைபெறும் சூரிகசாக்கி கடற்கரையில் அலைச்சறுக்கல் போட்டியும் நடத்தப்படவுள்ளது.
    டோக்கியோ 2020 ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழுவினால் மேலதிகமாக நடத்த பரிந்துரைக்கப்பட்டுள்ள ஐந்து வகையான விளையாட்டு நிகழ்ச்சிகளில் அலைச்சறுக்கல் போட்டியும் ஒன்றாகும்.
    இளமையும் துடிப்பும் மிக்க போட்டி நிகழ்ச்சிகளுடன்கூடிய கலாசாரத்தை ஒலிம்பிக்கில் அறிமுகப்படுத்தும் ஏற்பாட்டுக் குழுவினரின் நோக்கத்துக்கு அமைய இப் போட்டி அறிமுகமாகின்றது.
    அலைச்சறுக்கல் போட்டியை ஸ்டொக்ஹோம் 1912 ஒலிம்பிக்கில் இணைக்க முதன்முதலில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும் அந்த அழைப்பு கவனத்தில் கொள்ளப்படவில்லை.
    டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழா அலைச்சுறுக்கல் போட்டிகளில் 20 ஆண்களும் 20 பெண்களும் பங்குபற்ற அனுமதிக்கப்படுவர். ஒவ்வொரு நாட்டிலிருந்தும் இருவர் வீதம் இரு பாலாரிலும் தகுதிபெறமுடியும்.
    டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிக்கு முன்னோடியாக ஜப்பானியர்கள் மாத்திரம் பங்குபற்றிய ஒத்திகை அலைச்சறுக்கல் போட்டி கடந்த வருடம் ஜூலை மாதம் 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதிவரை வெற்றிகரமாக நடத்தப்பட்டிருந்தது. (என்.வீ.ஏ.)