• Breaking News

    இலங்கை லெஜன்ட் அணியின் வெற்றியை தட்டிப் பறித்தார் இர்பான் பதான்!


    நேற்று நடைபெற்ற வீதிப் பாதுகாப்பு இருபதுக்கு : 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்திய லெஜன்ட் அணி இலங்கை அணியை 5 விக்கெட்டுகளினால் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.
    5 அணிகள் கலந்து கொள்ளும் 2020 ஆம் ஆண்டுக்கான வீதிப் பாதுகாப்பு இருபதுக்கு : 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இந்தியாவில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.
    இத் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் திலகரத்ன தில்ஷான் தலைமையிலான இலங்கை லெஜன்ட் அணியும் சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்திய லெஜன்ட் அணடியும் மோதின.
    மும்பையில் நேற்றிரவு 7.00 மணிக்கு ஆரம்பமான இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியானது, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 138 ஓட்டங்களை குவித்தது.
    இலங்கை அணி சார்பில் தில்ஷான் 23 ஓட்டங்களையும் ரோமேஸ் களுவிதான 21 ஓட்டங்களையும், சாமர கபுகெதர 23 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர்.
    139 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இந்திய கிரிக்கெட் அணியானது 18.4 ஓவரில் 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
    இப் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு இறுதியாக 3 ஓவர்களில் 39 ஓட்டம் என்ற நிலையிருந்தபோது இர்பான் பத்தானின்  அதிரடியான துடுப்பாட்டம் காரணமாக 18.4 ஓவரிலேயே இந்தியா வெற்றி பெற்றமை விசேட அம்சமாகும்.
    அதன்படி இர்பான் பதான் ஆட்டமாழக்காமல் 31 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 6 பவுண்டரிகள் அடங்கலாக 57 ஓட்டங்களை குவித்தார்.
    நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ள இத் தொடரின் ஐந்தாவது போட்டியில் இலங்கை லெஜன்ட் அணியானது தென்னாபிரிக்க லெஜன்ட் அணியை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.