• Breaking News

    திருகோணமலை - பிரத்தியேக வகுப்புக்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்படவேண்டும்



    திருகோணமலை நகராட்சிமன்ற எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நாடாத்தப்படுகின்ற பிரத்தியேக வகுப்புக்கள் யாவும் தற்சமயம் இப்பகுதியில் வேகமாக பரவி வரும் டெங்கு நோயின் காரணமாக மாணவர்களுடைய பாதுகாப்பு கருதி 2019.12.18ம் திகதி இன்று முதல் 2020 ஜனவரி 01ம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்படவேண்டும் என திருகோணமலை நகரசபையில் 2019.12.17ம் திகதி நடைபெற்ற மாதாந்த கூட்டத்தில் சபையால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

    இக்காலப்பகுதியில் இவ்வறிவித்தலை மீறி நடாத்தப்படும் பிரத்தியேக வகுப்புக்குரிய நிர்வாகிகளுக்கு எதிராக பொலிசாரால் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. மாவணவர்களுடைய கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே தற்காலிகமாக வகுப்புக்கள் இடைநிறுத்தப்படும் காலம் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதியில் பிரத்தியேக வகுப்புக்கள் நடாத்தப்படுகின்ற கட்டடங்கள் நல்ல நிலையில் இல்லாததால் மாணவர்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக பெற்றோர் மூலம் அறியக்கிடைக்கின்றது. உதாரணமாக போதிய காற்றோட்டம், வெளிச்சம் இல்லாமை மாணவ மாணவியருக்கு தனியான கழிப்பறை வசதியில்லாமை, குடிநீர் வசதியின்மை, மாணவர்களுடைய துவிச்சக்கரவண்டி நிறுத்துவதற்கான தரிப்பிட வசதியின்மை, வகுப்புக்கள் நடைபெறும் சுற்றாடல் சுத்தமின்மையால் டெங்கு நுளம்புகள் உருவாக கூடிய சூழல், கட்டடத்தின் நிலங்களுக்கு சீமெந்து இடப்படாமல் மணல் காணப்படுவதால் மழை காலங்களில் மழைநீர் தேங்கிய தரையில் கல்வி கற்க வேண்டிய சூழல் ஏற்படுகின்றது. எனவும் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதால் தற்காலிகமாக பிரத்தியேக வகுப்புக்கள் இடைநிறுத்தப்படுகின்ற கால எல்லைக்குள் கட்டடங்கள் தரமானதாக மாற்றி அமைக்கப்படவேண்டும் எனவும், 2020ம் ஆண்டு சகல தனியார் கல்வி நிறுவனங்களும் நகரசபையில் பதிவு செய்வதோடு, அவற்றிற்கான வியாபார உரிமத்தையும் பெற்றுக்கொள்ள வேண்டும். வியாபார உரிமத்திற்கு விண்ணப்பிக்கப்படும் போது அக்கட்டடத்தை சுகாதார வைத்திய அதிகாரி, கல்வி திணைக்களத்தின் உத்தியோகத்தர், பிரதேச செயலக உத்தியோகத்தர், நகர சபை உத்தியோகத்தர் மற்றும் தனியார் வகுப்புக்களை நடாத்தும் நிறுவனத்தாரின் பிரதிநிதி ஒருவர் கொண்ட குழுவினர் பரிசீலனை செய்து இக்கட்டடத்தில் பிரத்தியேக வகுப்புக்கள் நடாத்துவதற்கு தேவையான அடிப்படை வசதிகள் யாவும் உள்ளதென சிபார்சு செய்யப்பட்ட கட்டடங்களில் மட்டும் வகுப்புக்களை நடாத்துவதற்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்படும். நகரசபையில் பதிவு செய்து அனுமதிபத்திரம் பெறாத தனியார் கல்வி நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சபையால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
    தலைவர்
    நகராட்சி மன்றம்
    திருகோணமலை.