சுகப்பிரசவம் – சிசேரியன் எது சிறந்தது ..?
கர்ப்பிணிப்பெண் குழந்தையைப் பெற்றெடுக்கும் நிகழ்வு பிரசவம் எனப்படும். இப்பிரசவமானது சாதாரண சுகப்பிரசவம், சிசேரியன் பிரசவம் என இரு பிரதான முறைகளைக் கொண்டது.
சில சமயம் சாதாரண சுகப்பிரசவம் உபகரணங்களின் உதவியுடன் Vaccum மற்றும் Forceps மூலமான பிரசவங்களாகவும் நடைபெறும். இவ்வாறான முறைகள் அனைத்தும் கர்ப்பத்தில் உள்ள சிசுவின் தன்மைகளையும் கர்ப்பிணிப் பெண்ணின் உடல் ஆரோக்கிய நிலைகளையும் பொறுத்து தீர்மானிக்கப்பட்டு பிரசவங்கள் நடைபெறுகின்றன.
இவ்வாறு நாம் பிரசவ முறைகளை தேர்வு செய்யும் போது தாய், சிசு இருவரது ஆரோக்கியத்துக்கும் எந்தக் கெடுதலும் வராதவாறு பொருத்தமான முறையை மேற்கொள்கின்றோம். இது இவ்வாறிருக்க குடும்ப உறுப்பினர்கள் சில சமயம் சாதாரண சுகப்பிரசவம் தான் எப்படியாவது வேண்டும் என்ற இறுக்கமான தீர்மானத்தில் இருப்பார்கள். முடியாதவற்றை நிறைவேற்ற முயற்சிக்கும் போது சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதாவது சுகப்பிரசவம் என நினைத்தது சிக்கல் பிரசவமாக மாறக்கூடும்.
சிக்கல் பிரசவம் என நாம் குறிப்பிடுவது தாய்க்கும் சிசுவுக்கும் பாதிப்புகள் அதிகம் என்பதாலேயே ஆகும். தாய்க்கான பாதிப்புகளாக அதிகப்படியான குருதிப்போக்கு, நீண்ட நேரமாக பிரசவ வலியும் வேதனையும், பிரசவத்தின் போது யோனி வாசல் பகுதி பெரிதாக கிழிவடைந்து அருகில் உள்ள மலவாசல் மற்றும் சலவாசல் பகுதிகளும் காயப்பட்டு சேதமடைதல், கிருமித்தொற்று காய்ச்சல் மற்றும் பிரசவத்திற்கு பின்னரான மனச்சோர்வு என்பனவாகும்.
குழந்தைக்கான பாதிப்புகளாக குழந்தையின் இருதயத் துடிப்பு குறைவடைதல், குழந்தை பன்னீர்குடத்தின் அழுக்குத் தண்ணியைக் குடித்தல் (Meconium), பிறந்தவுடன் குழந்தை மிகவும் சோர்வடைந்திருத்தல், ஆயுத பிரசவங்கள் மூலம் குழந்தையின் தலையில் காயங்கள், தோள் மூட்டு இறுகி வெளியில் குழந்தையை எடுக்கும்போது இழுக்கப்பட்டதால் குழந்தையின் கை நரம்புகள் காயப்பட்டு, கை உயர்த்த முடியாது போதல், கிருமித்தொற்று, காய்ச்சல், மஞ்சல் ஆகுதல் போன்று குழந்தை பாதிக்கப்படுவதுடன் எதிர்பாராத விதத்தில் குழந்தை மரணங்களும் சம்பவிக்கும். இவ்வாறு தாய்க்கும், சிசுவுக்கும் பாரதூரமான பாதிப்புகள் வருவதால் இப் பிரசவம் ஏற்பட எந்தச் சந்தர்ப்பத்திலும் அனுமதிக்கக் கூடாது. இதனைக் குடும்பத்தினர் புரிந்து வைத்தியர்கள் முடிவுகளை எடுக்கும்போது ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இதன்போதுதான் நாம் ஆரோக்கியமான தாயுடன் சேர்ந்து வாழ வழிவகுக்கலாம். எனவே நாம் சுகப்பிரசவம் என திட்டமிட்டவை எப்போது சிக்கலாக மாறுகின்றது எனப்பார்ப்போம்.
கர்ப்பத்தில் சிசு இருக்கும் நிலைகள் முக்கியமானது. சிசுவானது தலை கீழ்நோக்கியும் தலைப்பகுதி நன்றாக தாயின் இடுப்பினுள் பொருந்தி இருத்தல்தான் சுகப்பிரசவத்திற்கு உதவும். தலை திரும்பாமலும், தலை சரியாக தாயின் இடுப்பினுள் பொருந்தாமலும் இருந்தால் நாம் ஆசைப்பட்டாலும் கூட சுகப்பிரசவம் நடைபெறாது. அவற்றை சுகப்பிரசவமாக்க முயற்சித்தால் சிக்கல் பிரசவமாகத்தான் மாறும். மேலும் சிசுவின் கழுத்தில் கொடி பல தடவை சுற்றி இருந்தாலும் தொப்புள் நச்சுக்கொடி கர்ப்பப்பை வாசலை மூடி வளர்ந்திருந்தாலும் சுகப்பிரசவம் முடியாத காரியம். அத்துடன் சிசுவின் நிறை நான்கு (4) கிலோவை விட கூடுதலாக இருந்தாலும் சுகமான பிரசவம் சிக்கலாகத்தான் மாறும்.
மேலும் தாயின் உயரம் குறைவாக இருந்து இடுப்பு சிறிதாக இருப்பினும் சிசுவின் தலையை பிரசவிக்க முடியாது போகின்றது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் சிசுவின் தலையானது தாயின் இடுப்பினுள் இறுகி, சிசுவுக்கு பாதிப்புகள் ஏற்படும். அத்துடன் பிரசவ வலியில் தாய் எவ்வளவு நேரம் அவதிப்படுகிறாள் என்பதனையும் பார்க்க வேண்டும். பிரசவ வலியில் 10 – 12 மணித்தியாலங்களையும் தாண்டி அவதிப்படும் போது ஏன் இந்த தாமதம் எனப்பார்த்து சுகப்பிரசவம் முடியாவிட்டால் சிசேரியன் பிரசவமானது உரிய நேரத்தில் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் சிசுவின் உயிருக்குக் கூட ஆபத்து நேரிடலாம். அடுத்ததாக கர்ப்பிணிப்பெண் ஒருவர் பிரசவ வலியுடன் உள்ளபோது சிசுவின் இருதயத் துடிப்பு அளவை சரியாக பதிவு செய்யவேண்டும். சில சமயங்களில் சிசுவின் இருதயத் துடிப்பு குறைவடையத் தொடங்கினால் தொடர்ந்தும் தாமதிக்காமல் உடனடியாக சிசேரியன் செய்து குழந்தையைக் காப்பாற்ற வேண்டும். இதில் குடும்பத்தினர் தமக்கு சாதாரண சுகப்பிரசவம் தான் விருப்பம் எனவும் சிசேரியன் விருப்பம் இல்லை எனவும் அடம்பிடித்தால் உரிய நடவடிக்கைகள் தாமதமடைந்து குழந்தைக்கு உயிர் ஆபத்துகள் நேரிடலாம்.
அடுத்தபடியாக பிரசவம் எதிர்பார்ப்புத் திகதி EDD ஒவ்வொரு கர்ப்பிணிப் பெண்ணுக்கும் கொடுக்கப்படும். இந்த திகதியை கடந்தும் பிரசவவலி ஆரம்பிக்காவிட்டால் அடுத்து என்னசெய்வது என்று தீர்மானம் எடுக்க வேண்டும். பிரசவ வலியை ஆரம்பிக்கும் மருந்துகள் பாவிக்கலாம். அதிலும் தோல்வி கண்டால் சிசுவின் ஆரோக்கியத்தை உறுதி செய்து கொண்டு சுகப்பிரசவம் முடியுமா அல்லது சிசேரியன் செய்யலாமா என்ற முடிவுக்கு வரவேண்டும்.
இவ்வாறு பிரசவ முறையானது தாயினதும் குழந்தையினதும் ஆரோக்கியத்தை உறுதி செய்யக்கூடிய முறையாக எது பொருந்துமோ அதனையே தெரிவு செய்ய வேண்டும். ஒவ்வொரு கர்ப்பிணிப் பெண்ணுக்கும் ஒவ்வொரு நிலைமையிருக்கும். அதற்கேற்ப தேர்வுதான் பொருந்தும். இதனை சில குடும்பத்தினர் புரிந்துகொண்டு ஒத்துழைப்பு வழங்குகின்றனர். சிலர் தாம் நினைத்தவாறு சாதாரண சுகப்பிரசவம் நடைபெறவேண்டும். சிசேரியன் என்றால் வேண்டாம் என்ற பாணியில் கதைப்பார்கள். இவ்வாறான சந்தர்ப்பங்களில் நிலைமைகளை விளக்க வைப்பது சற்று கடினமாகவும் இருக்கும். எனினும் நன்மை தீமைகளை எடுத்துக்கூறி குழந்தையின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு சிகிச்சை முறைகளோ பிரசவங்களோ மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒவ்வொருவரும் தாம் விளங்கிக் கொண்டதற்கமைய விமர்சனங்களைச் சொல்வார்கள். ஆனால் தாய், சேய் நலன்காக்க வேண்டியது எமது கடமையாகும்.