• Breaking News

    வேற லெவலுக்கு சென்ற விஜய் மார்க்கெட்.. 300 கோடி கிளப்பில் பிகில்!


    பிகில் இசை வெளியீட்டு விழாவில் 'வேற லெவலுங்க நீங்க' என நடிகர் விஜய் பேசியிருப்பார். ஆனால், தற்போது சினிமா சந்தையில் வேற லெவலுக்கு சென்றிருப்பது விஜய் தான். தீபாவளியை முன்னிட்டு வெளியான விஜய்யின் பிகில் திரைப்படம் 300 கோடி கிளப்பில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உலகளவில் 280 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்யப்பட்டுள்ள பிகில் திரைப்படம் இந்த வார இறுதிக்குள் 300 கோடி கிளப்பில் இணைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஐமேக்ஸ் திரையரங்கில் வெளியான முதல் தமிழ் படம் விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் தான். எகிப்து மற்றும் ஜோர்டான் நாடுகளில் வெளியான முதல் தமிழ் படம் என்ற பெருமையையும் விஜய்யின் பிகில் பெற்றுள்ளது. மற்ற விஜய் படங்களை போலவே பிகில் திரைப்படமும் பல தடைகளை தாண்டி ரிலீசாகி மாபெரும் வெற்றியை ருசித்துள்ளது.

    45 வயதிலும், 25 வயது இளைஞனை போல எனர்ஜியுடன் நடிப்பது, நடனமாடுவது என குழந்தைகள் முதல் பெரியவர்கள் என பலரையும் நடிகர் விஜய் தன் வசம் வைத்துள்ளார். அந்த எனர்ஜி தான் விஜய் படங்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கின்றது. தளபதியாக ரசிகர்கள் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்துள்ள நடிகர் விஜய்யின் எனர்ஜி தான் அவரை இத்தனை பெரிய சூப்பர்ஸ்டாராக மாற்றியுள்ளது.

    மெர்சல், சர்கார், பிகில் என தொடர்ந்து மூன்று படங்களின் வசூலும் 250 கோடியை தாண்டியுள்ளதாக பாக்ஸ் ஆஃபிஸ் நிபுணர்கள் கணித்துள்ளனர். சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு அடுத்து கோலிவுட்டின் பாக்ஸ் ஆஃபிஸ் கிங்காக ஹாட்ரிக் வெற்றிகளை பெற்று கலக்கி வருகிறார் விஜய்.

    தமிழ்நாட்டில் விஜய்யின் பிகில் திரைப்படம் பாகுபலி 2ம் பாகத்தின் வசூலை வீழ்த்த இன்னும் சில கோடிகள் மட்டுமே தேவையாக இருக்கிறதாம். ஆதித்ய வர்மா படம் இந்த வாரம் வெளியாகாத நிலையில், இந்த வார இறுதியிலும் பிகில் மற்றும் கைதி திரைப்படங்கள் திரையரங்குகளில் தடையின்றி ஓடும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழ்நாட்டில் பாகுபலி 2ம் பாகம் வசூலித்த தொகையை பிகில் திரைப்படம் வீழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், விவேக், கதிர், இந்துஜா, அம்ரிதா ஐய்யர், வர்ஷா பொல்லம்மா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படம் 14 நாட்களில் உலகம் முழுவதும் 280 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எகிப்து, ஜோர்டான் என கூடுதலான நாடுகளிலும் பிகில் ரிலீசாகியுள்ளதால், இந்த வார இறுதிக்குள் 300 கோடி கிளப்பில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.