• Breaking News

    இடைக்கால கணக்கீட்டு திட்டத்தின் மூலம் அரச ஊழியர்களுக்கு சலுகைகள்


    2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரையான அரசாங்கத்தின் செலவினத்தை சமாளிப்பதற்காக ஆயிரத்து 474 பில்லியன் ரூபா பெறுமதியான இடைக்கால கணக்கீட்டு அறிக்கையை அமைச்சர் மங்கள சமரவீர நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
    இதில் அரச ஊழியர்களுக்கான சலுகைகள்  முன்மொழியப்பட்டுள்ளன.  இதன்படி, பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு செலுத்தப்படும் 14 நாள் விசேட கொடுப்பனவு டிசெம்பர் மாதம் 14 ஆம் திகதி முதல் புதிய கொடுப்பனவாக வழங்கப்படுகிறது.
    அரச ஊழியர்களின் அனர்த்த கடனை உயர்ந்தபட்ச தொகையாக 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவிலிருந்து மூன்று லட்சத்து 50 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான வட்டி வீதம் மூன்று சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது.
    அரச ஊழியர்களுக்கு துவிச்சக்கர வண்டியை கொள்வனவு செய்வதற்காக வழங்கப்பட்ட ஆறாயிரம் ரூபா தொகை பத்தாயிரம் ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. அலுவலக ஊழியர்களுக்கான வருடாந்த சீருடை கொடுப்பனவு ஐயாயிரம் ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
    2015 ஆம் ஆண்டு தொடக்கம் வெள்ளம், ஆட்சிக் கவிழ்ப்பு சதி, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் போன்ற பல்வேறு சவால்களுக்கு சமகால அரசாங்கம் முகம்கொடுத்து நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திர நிலையுடன் முன்னெடுத்ததாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். 2020 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்கான இடைக்கால கணக்கறிக்கையை பாராளுமன்றில் சமர்ப்பித்து உரையாற்றினார். 
    இந்த இடைக்கால கணக்கறிக்கை எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் ஏப்ரல் மாதம் வரை நான்கு மாதங்களுக்கானது.
    கடந்த ஆண்டு 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் மறுநாள் சமர்ப்பிக்கப்பட இருந்த நிலையில் ஒக்டோபர் 26 ஆம் திகதி அரசியல் சதி மூலம் சமகால அரசாங்கம் கவிழ்க்கப்பட்டது. அதன் காரணமாக மீண்டும் நாம் அந்த சதியை தோற்கடித்து ஆட்சிக்குவந்ததும் இடைக்கால கணக்கறிக்கையொன்றை சமர்ப்பித்தோம். இவ்வாண்டு ஏப்ரல் மாதம் தான் 2019 ஆம் ஆண்டுக்காண வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
    2015 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததுமுதல் பல்வேறு சவால்களையும், நெருக்கடிகளையும் நாம் சந்தித்துள்ளோம். 2016, 2017 ஆம் ஆண்டுகளில் வெள்ளம் ஏற்பட்டது. 2018 ஆம் ஆண்டு ஆட்சிக்கவிழ்ப்பு, 2019 ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் எமது சுற்றுலாத்துறை பாரிய வீழ்ச்சிகண்டது. என்றாலும் மிகவும் குறுகிய காலத்தில் அதனை மீளக் கட்டியெழுப்பியுள்ளோம். மிகவும் குறுகிய காலத்துக்குள் பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தியுள்ளோம்.
    சஞ்சாரக பொட்டோ போன்ற சலுகைகளை ஹோட்டல் துறையினருக்கு வழங்கி வீழ்ச்சிகண்ட சுற்றுலாத்துறையை மீளக்கட்டியெழுப்பியுள்ளோம் என்றும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர மேலும் தெரிவித்தார்.