• Breaking News

    மீட்கப்பட்ட சுஜித்தின் உடலை ஏன் வெளி உலகுக்கு காட்டவில்லை - ராதாகிருஷ்ணன் விளக்கம்


    ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து சடலமாக மீட்கப்பட்ட குழந்தை சுஜித்தின் உடலை வெளி உலகுக்கு காட்டாதது குறித்து பொதுமக்களிடையே பல்வேறு விதமான கருத்துகள் நிலவி வரும் நிலையில், மீட்புப் பணி மற்றும், குழந்தை சடலமாக மீட்கப்பட்டது குறித்து தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார்.


    இதுகுறித்து சென்னை எழிலகத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது, “சில இடங்களில் தவறான கருத்துகள் நிலவி வருகிறது. இறந்த உடலை மீட்பதற்கென சில விதிமுறைகள் இருக்கின்றன. சுஜித் மீட்கப்பட்டதில் முறையான விதிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன. களத்தில் 600-க்கும் மேற்பட்டோர் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மிக வேதனையிடன் தான் அவர்கள் அங்கே பணியாற்றியிருக்கின்றனர்.

    களப்பணியாளர்களின் திறனை சந்தேகிப்பது சரியான எண்ணம் இல்லை. ஒவ்வொரு நொடியும் உயிருடன் குழந்தையை மீட்க வேண்டும் என்று தான் அனைவரும் மீட்புப் பணீயில் ஈடுபட்டனர். துரதிஷ்டவசமாக குழந்தையை காப்பாற்ற முடியவில்லை.


    மீட்புப் பணியின் போது துர்நாற்றம் வீசியதால் தான், பணிகளை நிறுத்திவிட்டு, குழந்தையின் சடலம் மீட்கப்பட்டது. அதுவும் பேரிடர் மீட்புக் குழுவின் வழிமுறைப்படியே மீட்கப்பட்டது.

    சுஜித்தை தன்னால் மீட்க முடியும் என்று லக்னோவில் இருக்கும் ஒருவர் கூறினார். அவர் அங்கிருந்து வருவதாகக் கூறியதால் அவருக்கு விமான டிக்கெட் எடுத்துக் கொடுக்கப்பட்டது. அனைத்து முயற்சிகளும் சரியாக எடுக்கப்பட்டன” என்றார்.

    இதையடுத்து மீட்கப்பட்ட சுஜித்தின் உடல் ஏன் ஊடகங்களுக்கு காட்சிப்படுத்தவில்லை என்று செய்தியாளர்கள் ராதாகிருஷ்ணனிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “இறந்த சடலம் அதற்குரிய மரியாதையோடுதான் நடத்தப்பட வேண்டும். அதுதான் விதிமுறை.



    பேரிடர் மீட்புப் படையின் வழிமுறைகள் முழுமையாக பின்பற்றப்பட்டுள்ளது. உயிருடன் இருக்கும் போது நடைபெறும் மீட்புப் பணி என்பது வேறு. சடலமாக மீட்கும் போது அதே மீட்புப் பணி மாறுபடும்.

    விபத்து, போர் , பேரிடர் போன்றவற்றில் உயிரிழந்தவர்களின் உடல்களை காட்சிப்படுத்துவதில் மத்திய, மாநில அரசுகளின் விதிமுறைகள் தான் பின்பற்றப்பட்டுள்ளது. கும்பகோணம் தீ விபத்தில் இறந்த குழந்தைகளை காட்சிபடுத்தியது பல்வேறு விமர்சனங்களை சந்தித்து அதன் பிறகு மத்திய அரசு பல்வேறு விதிமுறைகளை விதித்தது.

    அந்த விதிமுறைகளை பின்பற்றி தான் குழந்தை சுஜித்தின் உடல் மீட்கப்பட்டது. ஒவ்வொரு நிலையிலும் குழந்தையின் நிலை குறித்து அதன் பெற்றோரிடம் விவரிக்கப்பட்டுள்ளது. குழந்தையின் டி.என்.ஏ.மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. அதை வைத்து குழந்தை எப்போது இறந்தது என்ற போன்ற விவரங்கள் கிடைக்கும். இதற்கு மேல் இது குறித்து பேசுவது விதிமுறைக்கு மாறாக இருக்கும்

    இந்திய அளவில் இருக்கக்கூடிய அனைத்து வகையான உபகரணங்களையும் பயன்படுத்தி தான் மீட்பு பணிகள் நடைபெற்றன. மனிதனால் முயன்ற அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டன. இது குறித்து மேலும் விவாதிப்பது விதிமுறைகளுக்கு எதிரானதாக இருக்கும். சுஜித் மாதிரியான இறப்புகள் இனி இருக்கக்கூடாது. ஆகையால் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகளை மூட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.