• Breaking News

    அலுவலகத்தில் பாஸின் செல்லப் பிள்ளையாக இருக்க என்ன செய்ய வேண்டும்..?

     

    அப்படி என்ன வசியம் செய்கிறான் என்று புலம்பும் பல பேரில் நீங்களும் ஒருவரா ? அப்போ இதை கட்டாயம் படியுங்கள்

    பாஸின் செல்லப் பிள்ளைகளுக்கு என்றுமே அலுவலகத்தில் தனி மதிப்புதான். பாஸுக்கு பயப்படுகிறார்களோ இல்லையோ அவர்கள் கடந்து சென்றாலே அமைதி காப்பார்கள். அப்படி என்ன வசியம் அவன் செய்கிறான் என்று புலம்பும் பல பேரில் நீங்களும் ஒருவரா.. அப்போ இந்த கட்டுரை உங்களுக்குத்தான்.

    அலுவலக நேரம் அவசியம் : எந்த விஷயமானாலும் அலுவலக நேரத்தில் மட்டும் சமரசம் செய்து கொள்ளாதீர்கள். சரியான நேரத்திற்கு அல்லது முன்கூட்டியே செல்வதற்கு முயற்சி செய்யுங்கள். எப்போதாவது நிகழும் எதிர்பாராத தாமதங்களுக்கு முறையான அனுமதி, குறுஞ்செய்திகளை சரியாக பின்பற்றுங்கள்.

    தேவைகளை பூர்த்தி செய்தல் : உங்கள் பாஸின் பிரச்னை என்ன , எதை எதிர்பார்க்கிறார் என்பதை சரியாக புரிந்துகொள்ளுங்கள். அதை தக்க சமயத்தில் , சரியான நேரத்தில் ஒப்படைத்தால் நீங்கள்தான் செல்லப்பிள்ளை. உங்கள் பிராஜெக்டுகளையும் நேரம் தாழ்த்தாமல் ஒப்படையுங்கள்.


    வேலைகளில் தெளிவு : எந்த வேலையானாலும் மேலோட்டமாக ஏனோ தானோவென செய்யாமல் ஒவ்வொரு விஷயத்திலும் தெளிவாக செயல்படுங்கள். நீங்கள் செய்யும் வேலைகளில் பிழைகள், குறைகளின்றி அத்தனை தகவல்களையும் தெளிவாக கொடுங்கள். தேவையையும் தாண்டி சில விஷயங்களைக் கொடுக்க முடிந்தாலும் கொடுத்து பாஸின் அன்பைப் பெறுங்கள்.

    நன்மதிப்பைப் பெறுங்கள் : அவ்வப்போது உங்கள் வேலை குறித்து பாஸிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். அது நேர்மறையாக இருந்தாலும், எதிர்மறையாக இருந்தாலும் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். இது உங்களின் வளர்ச்சிக்கும் உதவும். பாஸிடமும் சிறந்த பேரை பெற முடியும்.

    உங்கள் வாதத்தை முன் வையுங்கள் : மீட்டிங் அல்லது கருத்து, ஆலோசனை தொடர்பான மீடிங்கில் எதுவும் பேசாமல் அமர்ந்திருப்பது உங்களுக்கு நன்மதிப்பைத் தராது. எதிர் வாதங்கள் வரும் என்றாலும் உங்கள் தரப்பு வாதங்கள் , கருத்தை முன் வையுங்கள். இதனால் உங்கள் பாஸிற்கும் நீங்கள் நன்கு தெரிந்த நபராக இருப்பீர்கள். அதுமட்டுமன்றி நிறுவன வளர்ச்சி மீதான உங்கள் அக்கறையும் அவருக்கு தெரியவரும்.

    முடிந்தால் சிறு பயணம் : ஆக்ஸ்போர்ட் எக்கனாமிக்ஸ் நடத்திய ஆய்வில் பாஸ் அலுவலகத்தைத் தாண்டி வெளியிடத்தில் சந்திக்கும்போது இன்னும் நட்போடு பழுவார்கள். உங்கள் பாஸை புரிந்துகொள்ள நல்ல சந்தர்ப்பம். நல்லுறவை வளர்க்க சிறந்த வாய்ப்பு என்று கருத்து தெரிவித்துள்ளது. எனவே முடிந்தால் அலுவலக ட்ரிப்புகளை தவிர்க்காமல் சென்று வாருங்கள்.