Ticker

6/recent/ticker-posts

சிரியா மீது துருக்கி தாக்குதல்: தனி நாடு கேட்டு போராடும் குர்து மக்களின் நீண்ட நெடிய போராட்ட வரலாறு


துருக்கி, இராக், சிரியா, இரான் மற்றும் ஆர்மீனியா எல்லைகளை ஒட்டிய மலைப் பகுதிகளில் 25 முதல் 35 மில்லியன் வரையிலான குர்து இன மக்கள் வசிக்கின்றனர். மத்திய கிழக்கில் நான்காவது பெரிய இனத்தவர்களாக அவர்கள் உள்ளனர். ஆனால் அவர்களுக்கென சொந்தமாக ஒரு நாடு இருந்தது கிடையாது.

அவர்கள் எங்கிருந்து வந்தார்கள்?

இப்போது தென் கிழக்கு துருக்கி, வட கிழக்கு சிரியா, வடக்கு இராக், வடமேற்கு இரான் மற்றும் தென்மேற்கு ஆர்மினியா பகுதிகளாக உள்ள மெசபடோமிய சமவெளி மற்றும் மேடான பகுதிகளைச் சேர்ந்த பூர்விக மக்களில் ஒரு இனத்தவர்களாக குர்து மக்கள் உள்ளனர்.
இப்போது அவர்கள் இனம், கலாச்சாரம், மொழி அடிப்படையில் ஒன்றுபட்ட தனி சமுதாயத்தினராக இருந்தாலும், இயல்பாகப் பயன்படுத்தும் பேச்சு மொழி எதுவும் கிடையாது. பெரும்பாலானவர்கள் சன்னி இஸ்லாமியர்களாக இருந்தாலும், வெவ்வேறு மதங்கள், நம்பிக்கைகளைப் பின்பற்றி வருகிறார்கள்.

அவர்களுக்கு ஏன் அரசு இல்லை?

20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ``குர்திஸ்தான்'' என்று பொதுவாகக் குறிப்பிடும் - தாய் நாடு ஒன்றை உருவாக்க வேண்டும் என்று குர்து மக்கள் பலரும் யோசித்தனர். முதலாவது உலகப் போருக்குப் பிறகு, ஓட்டோமன் சாம்ராஜ்யம் வீழ்ந்த பிறகு, வெற்றி பெற்ற மேற்கத்திய கூட்டுப் படையினர் 1920 ஆம் ஆண்டு பிரான்ஸில் செவ்ரெஸில் கையெழுத்தான ஒப்பந்தத்தின்படி, குர்திஸ் அரசு உருவாக்குவதற்கு வழி வகுத்தனர்.
மூன்று ஆண்டுகள் கழித்து அந்த நம்பிக்கைகள் தகர்க்கப்பட்டன. நவீன துருக்கியின் எல்லைகளை வரையறுத்த லாவ்சன்னே ஒப்பந்தத்தின்படி, குர்திஸ் அரசுக்கு எந்த உறுதியும் அளிக்கவில்லை. தாங்கள் வாழும் நாடுகளில் குர்திஸ் மக்கள் சிறுபான்மை நிலைக்குத் தள்ளப்பட்டனர். அடுத்த 80 ஆண்டுகளில், சுதந்திரமான அரசை உருவாக்க குர்துகள் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும், கடுமையாக அடக்கப்பட்டன.

ஐ.எஸ்.-க்கு எதிரான போரில் குர்துகள் ஏன் முன்னணியில் இருந்தனர்?

2013 ஆம் ஆண்டின் மத்தியில், தனது கட்டுப்பாட்டில் வடக்கு சிரியாவில் இருந்த எல்லைக்குள் மூன்று குர்திஸ் வாழ்பகுதிகளை ஐ.எஸ். ஜிகாதி குழுவினர் குறி வைத்தனர். தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தினர். சிரிய குர்திஸ் ஜனநாயக ஐக்கிய கட்சியின் ஆயுதம் தாங்கிய மக்கள் பாதுகாப்புப் பிரிவுகளால் விரட்டப்படும் வரை அந்தத் தாக்குதல்கள் தொடர்ந்தன.
ஜூன் 2014ல் வடக்கு இராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் முன்னேறியதும், அந்த நாட்டு குர்து மக்களைச் சர்ச்சைக்குள் இழுப்பதாக இருந்தது. இராக்கிய ராணுவத்தால் கைவிடப்பட்ட பகுதிகளுக்கு, தன்னாட்சி பெற்ற இராக்கில் குர்திஸ்தான் பிராந்தியத்தின் அரசாங்கம் தனது பெஷ்மெர்கா படைகளை அனுப்பியது.
ஆகஸ்ட் 2014-ல் ஜிகாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியதை அடுத்து பெஷ்மெர்கா படையினர் பல பகுதிகளிலிருந்து வாபஸ் ஆயினர். மத சிறுபான்மையினர் வசித்து வந்த பல நகரங்கள் வீழ்ந்துவிட்டன. குறிப்பாக சின்ஜரில், ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆயிரக்கணக்கான யசிடிகளை கொலை செய்தனர் அல்லது சிறை பிடித்தனர்.

 

அதற்குப் பதிலடியாக அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டுப் படைகள் விமானத் தாக்குதலை வடக்கு இராக்கில் நடத்தி, பெஷ்மெர்காவினருக்கு உதவி செய்வதற்காக தங்களின் ராணுவ ஆலோசகர்களை அனுப்பியது. மக்கள் பாதுகாப்புப் பிரிவுகளும் குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியும் (பி.கே.கே.) குர்திஷ் தன்னாட்சிக்காகத் துருக்கியில் மூன்று தசாப்தங்களாகப் போராடி வந்தன. இராக்கில் தளம் அமைத்திருந்த அவர்களும், உதவிக்கு வந்தனர்.
செப்டம்பர் 2014-ல் வடக்கு சிரியாவில் குர்திஷ்களின் கொபானே நகரின் மீது ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், பல பத்தாயிரம் பேர் அருகில் உள்ள துருக்கிய எல்லைக்கு இடம் பெயர்ந்தனர். அருகிலேயே சண்டை நடந்தபோதிலும், ஐ.எஸ். தீவிரவாதிகளின் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தத் துருக்கி மறுத்துவிட்டது. தங்களைத் தற்காத்துக் கொள்ள எல்லை தாண்டிச் செல்ல துருக்கிய குர்திஷ்களுக்கும் அனுமதி தரவில்லை.
ஜனவரி 2015ல் குறைந்தது 1,600 பேர் கொல்லப்பட்ட சண்டைக்குப் பிறகு, கொபானே நகரை குர்திஷ் படைகள் மீண்டும் வசப்படுத்தின.
சிரிய ஜனநாயகப் படைகள் (எஸ்.டி.எப்.) கூட்டணி என்ற பெயரில் வந்த பல உள்ளூர் அரபு ராணுவப் பிரிவினருடன் சேர்ந்து, அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினரின் விமானத் தாக்குதல்கள், ஆயுதம் மற்றும் ஆலோசனை உதவிகளுடன் - குர்து இனத்தவர்கள் போராடி வட கிழக்கு சிரியாவில் பல பத்தாயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பிலிருந்து ஐ.எஸ். தீவிரவாதிகளை விரட்டியடித்து, துருக்கியுடனான எல்லையில் பெரும் பகுதியில் கட்டுப்பாட்டை நிர்மாணித்தனர்.
அக்டோபர் 2017-ல் எஸ்.டி.எப். வீரர்கள் ஐ.எஸ். தீவிரவாதிகளின் தலைமையிடமாகக் கருதப்பட்ட ரக்கா -வை கைப்பற்றி, தென்கிழக்கு பகுதியில் முன்னேறினர். ஜிகாதிகளின் கடைசி முக்கிய தளமாக இருந்த சிரியாவின் டெயிர் அல்-ஜவுர் மாகாணத்தை நோக்கி அவர்கள் முன்னேறிச் சென்றனர்.