• Breaking News

    ஒக். 05; ஒரே மேடையில் கோட்டா, சஜித், அநுர


    ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள பிரதான அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களான சஜித் பிரேமதாச, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் ஒரே மேடையில் நாட்டு மக்களுக்குத் தமது கொள்கைகளை விளக்கவுள்ளனர்.  
    பெப்ரல் அமைப்பின் ஏற்பாட்டில் எதிர்வரும் 5ஆம் திகதி கொழும்பு சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
    பிரதான வேட்பாளர்கள் மூவரும் இங்கு உரையாற்றுவதாக பெப்ரல் அமைப்புக்கு வாக்குறுதியளித்துள்ளனர். இதுதொடர்பில் பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி கருத்து வெளியிடுகையில்:  
    நாட்டின் சிறந்த ஜனாதிபதியைத் தெரிவுசெய்ய மக்களுக்கு சிறந்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் முகமாக இதற்கான ஏற்பாடுகளை பெப்ரல் அமைப்பு ஒழுங்கு செய்துள்ளது. இதுவரை காலமும் ஜனாதிபதி வேட்பாளர்கள் ஒரே மேடையில் தோன்றி தமது கொள்கைகளை நாட்டு மக்களுக்குத் தெளிவுபடுத்தியதில்லை. இம்முறை அதற்கான சந்தர்ப்பத்தை உருவாக்கியுள்ளோம்.  
    போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களையும் ஒரே மேடைக்குக் கொண்டுவர வேண்டுமென்பது எமது எதிர்பார்ப்பாக இருந்த போதிலும், அது நடைமுறைக்குச் சாத்தியமில்லாதிருந்ததது. குறிப்பாக கடந்த தேர்தலில் 17 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். பிரதான இரண்டு வேட்பாளர்களைத் தவிர்த்து ஏனைய அனைத்து வேட்பாளர்களும் இணைந்து 1,38,000 வாக்குகளை மாத்திரமே பெற்றுக்கொண்டனர். அதன் காரணமாக 2 இலட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை ஜனாதிபதித் தேர்தலில் பெற்றுக்கொண்ட கட்சிகளுக்கு மாத்திரம் ஒரே மேடைக்கு அழைப்பதென எமது குழு தீர்மானித்தது. 5ஆம் திகதி நடைபெறவுள்ள இந்நிகழ்வில் மக்களால் வழங்கப்பட்ட கேள்விகளே வேட்பாளர்களிடம் கேட்கப்படவுள்ளன.
    இந்நிகழ்வை நாட்டின் அனைத்து மக்களும் தொலைக்காட்சிகளில் பார்வையிட முடியும். அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் இது நேரடியாக ஒளிப்பரப்பப்படும் என்றார்.