Latest News

பாலுறவு உச்சநிலையில் எல்லாப் பெண்களும் திரவத்தை வெளியேற்றுகிறார்களா?

 பாலுறவின்போது எல்லாப் பெண்களும் உச்ச நிலை அடைந்து திரவத்தை வெளியேற்றுகிறார்களா?
இந்த கேள்வி, 2016ம் ஆண்டின் பிற்பாதியில், அமெரிக்க பத்திரிகையாளர் சோய் மெண்டல்சனுக்கும், அவரது அப்போதைய காதலருக்கும் இடையில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
திருப்தி அளிக்கக்கூடிய விடை கிடைக்காத நிலையில், கூகுளில் தேட அவர்கள் இருவரும் முடிவு செய்தனர்.
"முட்டாள்தனமான, தேவையில்லாத தகவல்களே கூகுள் தேடலில் கிடைத்தன," என்று பிபிசியிடம் தெரிவித்த சோய் மெண்டல்சன், "கூகுளில் தேடுவதற்கு பதிலாக மருத்துவ சஞ்சிகைகளில் தேட முடிவு செய்தேன்," என்கிறார்.
இந்த முயற்சியும் அவருக்கு உதவவில்லை. "அவற்றில் குறிப்பிடும் உடல் உறுப்பையோ, அந்த உறுப்புகள் இருக்கும் இடத்தையோ, அவற்றின் செயல்பாட்டையோ என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை," என்கிறார் சோய்.
இதனால், இரண்டு முடிவுகளுக்கு வந்தார் சோய் மெண்டல்சன். "ஒன்று, தங்களுக்கு கிடைத்த எல்லா தகவல்களும் முட்டாள் தனமானவையாக, ஏற்றுக்கொள்ள முடியாதவையாக இருப்பது பெரிய பிரச்சனை. இரண்டாவது, எனது உடலை பற்றி எனக்கு எதுவும் தெரியாமல் இருப்பதை தெரிந்துகொண்டேன்," என்கிறார்.
இரண்டு ஆண்டுகள் கடந்த பின்னர், சோய் மெண்டல்சன் தனது தோழியான மெக்ஸிகோவை சேர்ந்த ஓவியர் மரியா கோனெஜோவுடன் சேர்ந்து ‘புஸ்ஸிபீடியா‘ இணைய தளத்தைத் தொடங்கினார். பெண்ணின் உடல் பற்றிய நம்பகமான தகவல்களை அளிக்கும் ஆன்லைன் தகவல் களஞ்சியம்தான் ‘புஸ்ஸிபீடியா‘.
பெண்ணுறுப்பை குறிக்கும் கொச்சையான ஆங்கிலச் சொல்லான "புஸ்ஸி" என்பதுதான் இந்த பணித்திட்டத்தில் முக்கியமானது. ஆனால், பெண்ணுறுப்பு, பெண் கருப்பை வாய் (vulva), பெண்ணுறுப்பின் வெளிப்பகுதி (clitoris), கருப்பை, சிறுநீரகம், மலக்குடல், மலவாய் ஆகியவை என பரந்த அளவில் இந்த சொல்லை பயன்படுத்த இந்த களஞ்சியத்தை உருவாக்கியவர்கள் விரும்பினர். எதிர்காலத்தில் ஆண்களின் விரைகளைப் பற்றிக்கூட பேசலாம் யாருக்கு தெரியும்?"

இத்தகைய பணித்திட்டம் தேவைதானா?

நாம் இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் வாழ்கிறோம். #MeToo இயக்கத்துக்கு பிந்தைய காலத்தில், உலக நாடுகளிலுள்ள பள்ளிகளில் பாலியல் கல்வி கற்றுக் கொடுக்கப்படுவதோடு, பெரும்பாலான மக்களின் விரல் நுனியில் இணைய வசதி இருக்கும் காலத்தில் இந்த பணித்திட்டம் தேவையா?
இதற்கு மரியாவின் விடை இரண்டு வாக்கியங்களே: "தகவல்கள் வலிமை மிக்கவை" மற்றும் "அவமானப்படுதல் ஆபத்தானது".
"பாலின சமத்துவம் என்று வருகின்றபோது, முன்னேற்றத்தை உயர்வாக மதிப்பிட்டு விடுகிறோம் என்று நான் நினைக்கிறேன்" என்கிறார் சோய்.
"பெருமளவு பாகுபாடுகள் நிறைந்ததும், நமது உடல் மற்றும் பாலியல் பற்றி அவமானமாக கருதுவதுமான உலகில்தான் நாம் இன்னும் வாழ்கிறோம்" என்று கூறும் அவர், சமுதாயம் அதிகமாக திறந்த மனப்பான்மை உடையதாக மாறினாலும், இந்தப் பிரச்சனைகளை நாம் இன்னும் சர்வதேசமயமாக்குகிறோம்".
இதனை மரியாவும் ஒப்புக்கொள்கிறார். "நம்மைப் பற்றியும், நமது உடலைப் பற்றியும் நமக்கு தெரியும் என்று நாம் எண்ணிக்கொள்கிறோம். ஆனால், சிலவற்றை உறுதியாக கேட்டு தெரிந்து கொள்வதற்கு வெட்கப்படக்கூடாது. இந்த மனப்பான்மையே நாம் அதிகம் அறிந்து கொள்வதை கட்டுப்படுத்துகிறது," என்று மரியா பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
பல பங்களிப்பாளர்களின் உதவியோடு சோயும், மரியாவும் ஜூலை மாதம் புஸ்ஸிபீடியாவை தொடங்கினர்.
ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் மொழிகளில் கட்டுரைகளை வழங்கும் இந்த இணையதளத்தை, இது வரை ஒரு லட்சத்து முப்பதாயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர்.
பெண்ணின் இனப்பெருக்க உறுப்பின் வெளிப்பகுதியை நன்றாக சுத்தம் செய்வது எப்படி?, கருத்தரிப்பதை பூச்சிக்கொல்லிகள் எவ்வாறு பாதிக்கின்றன? போன்ற கேள்விகளுக்கு இதில் விடை தேடியுள்ளது தெரிய வருகிறது.
புஸ்ஸிபீடியாவிலுள்ள கட்டுரைகள், கட்டுரைகைளின் கருத்துக்கள் எடுக்கப்பட்ட ஆதாரங்களின் இணைப்புகளையும் சேர்த்தே தருகின்றன.

"பீனிஸ்பீடியா" உருவாகுமா?

நம்பிக்கைக்குரிய ஆதாராங்களில் இருந்து நம்பகரமான தகவல்களை கண்டறிய சோயும், மரியாவும் கடினமாக வேலை செய்தாலும், சில கேள்விகளுக்கு விடை அளிப்பது இன்னும் கடினமாகவே உள்ளது.
ஏன்?
பெண்குறியின் இனப்பெருக்க செயல்பாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு பார்த்தால், ஆண்குறி மற்றும் அதன் செயல்பாடுகள் பற்றியதைவிட, பெண்குறி குறைவாகவே ஆய்வு செய்யப்பட்டுள்ளது என்று இவர்கள் தெரிவிக்கின்றனர்.
"எனது கேள்விக்கு இன்னும் விடைகாண முயன்று வருகிறேன்" என்று தெரிவிக்கிறார் சோய். "(பெண்களின் உடலியல் பற்றி வருகிறபோது) பல தகவல்கள் இல்லை. விஞ்ஞான சமூகத்தில் உடன்பாடும் இல்லை. எடுத்துக்காட்டாக, பெண்குறி காம்பில் (கிளிட்டோரிசில்) என்ன வகை உடல் திசுக்கள் உள்ளன என்பது கூட நமக்குத் தெரியாது" என்று அவர் கூறுகிறார்.
"பீனிஸ்பீடியா"வின் தேவை இருக்காது என்று இவர்கள் நினைக்கின்றனர்.
"எந்தவொரு மருத்துவ சஞ்சிகையில் அல்லது சுகாதார புத்தகங்களில் "பீனிஸ்" (penis) என்று தேடினால், பல கட்டுரைகள் உள்ளன. ஆனால், பெண்குறி (vagina) என்று தேடினால், அவ்வாறு கட்டுரைகள் இல்லை" என்று சோய் தெரிவிக்கிறார்.
அதிக தகவல்கள் இருப்பதால், அதற்கு ஒத்த அதிக அறிவும் உள்ளது என்றும் எடுத்துகொள்ள முடியாது என்று மரியா சுட்டிக்காட்டுகிறார்.
"ஆண்கள் தங்கள் உடல் பற்றி இன்னும் குறைவாகவே அறிந்து வைத்துள்ளனர் என்றே கருதுகிறேன். ஆண்குறி பற்றி அதிக தகவல்கள் இருந்தாலும், தங்களின் உடல் பற்றி அதிகமாகவும், பெண்களை பற்றி மேலும் குறைவாகவும் அறிந்து கொள்வதை ஆண்மை மனப்பான்மை தடுக்கிறது" என்று சோய் குறிப்பிடுகிறார்.
ஆனால், பெண்கள் தங்களை பற்றி அறிவதற்கு அதிக ஆர்வமுடையவர்கள். புஸ்ஸிபீடியாவை உருவாக்க, மக்களிடம் இருந்து நிதி திரட்ட மரியாவும், சோயும் தொடங்கியபோது, மூன்றே நாட்களில் தங்களின் உண்மையான இலக்கை விட மூன்று மடங்கு அதிகமாக 22 ஆயிரம் டாலர்கள் திரட்ட முடிந்தது.
இரண்டு ஆண்டுகள் இலவசமாக வேலை செய்த பின்னர், இந்த நிதியைக் கொண்டு மரியாவும், சோயும் புஸ்ஸிபீடியாவை தொடங்கியுள்ளனர். இதில் பதிவேற்றம் செய்கிற கட்டுரைகளை வழங்குவோருக்கு பணம் வழங்கவும், சமீபத்திய தகவல்களை வழங்கவும் புஸ்ஸிபீடியா மூலம் இவர்கள் வருவாய் பார்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
வாசகர்கள் ஒரு கட்டுரைக்கு புரவலராக மாறும் வாய்ப்பை இந்த இணையதளம் வழங்குகிறது. இதில் இடம்பெறும் மரியாவின் சித்தரிப்பு படங்களையும் விற்கிறார்கள்.
"நியாயமான வழிமுறையில் பெண்களின் உடலை பற்றிய தகவல்களை அறிவிக்க ஐந்து ஆண்டுகளாக நான் முயன்று வருகிறேன்" என்று கூறும் மரியா, "பெண்ணின் பாலியலை ஆய்வு செய்து, பெண்களின் உடலை பற்றி தெரிவிக்க விரும்புகிறேன். நிர்வாணமான உடல் எவ்வாறு பார்க்கப்படுகிறது என்பதை மாற்ற விரும்புகிறேன்" என்கிறார்.
"நான் கற்ற எல்லாவற்றையும் சுருக்கமாக வழங்கும் திறனை புஸ்ஸிபீடியா கொடுத்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பணித்திட்டத்தை விரிவாக்கி, இதுவரை அதிகம் பேசப்படாத ‘திருநங்கை பாலியல் சுகாதாரம்‘ பற்றி அதிக கட்டுரைகளை வெளியிடவும் சோய் விரும்புகிறார்.
அதேவேளையில், தனது முதல் கேள்வியான பாலுறவின் உச்ச நிலையில் எல்லா பெண்களும் திரவத்தை வெளியேற்றுகின்றனரா? என்கிற கோள்விக்கு விரைவில் பதிலளிக்கும் கட்டுரையை பதிவேற்ற முடியும் என்று நம்பிக்கையோடு அவர் உள்ளார்.

By - BBC TAMIL  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: பாலுறவு உச்சநிலையில் எல்லாப் பெண்களும் திரவத்தை வெளியேற்றுகிறார்களா? Description: Rating: 5 Reviewed By: Riish
Scroll to Top