தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை: 2019க்கு விண்ணப்பித்தவர்கள் விரும்பினால் தோற்றலாம் | Trincoinfoசுற்றுநிருபம் வெளியிடப்பட்ட நாள் முதல் நடைமுறை தரம் 5 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றுவது கட்டாயமில்லை எனும் அரசாங்கத்தின் நிலைப்பாடு அதற்கான சுற்றுநிருபம் வெளியிடப்பட்ட திகதி முதல் செல்லுபடியாகுமென கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய இவ்வருடம் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சையிலும் இச் சுற்று நிருபம் செல்லுபடியாகுமென கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் ஹேமந்த பிரேமதிலக்க கூறினார்.

புலமைப்பரிசில் பரீட்சை அனைத்து மாணவர்களுக்கும் கட்டாயமில்லையெனத் தெரிவித்து கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள இலக்கம் 08/2019 எனும் சுற்று நிருபத்தில், தீர்மானம் நடைமுறைக்கு வரும் வருடம் குறிப்பிடப்படாததால் மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் பெரும் குழப்பத்துக்கு உள்ளாகி வருவதாக தினகரன், கல்வி அமைச்சின் கவனத்துக்கு கொண்டு வந்ததையடுத்தே அமைச்சின் மேலதிகச் செயலாளர் மேற்படி விளக்கத்தை வழங்கினார். "இதன்படி 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 08 ஆம் திகதியன்று கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பிலான சுற்று நிருபம் அத்திகதி முதல் நடைமுறைக்கு வருவதனால் இவ்வருடம் ஓகஸ்ட் புலமைப்பரிசில் பரீட்சைக்கு விண்ணப்பித்த அனைத்து மாணவர்களும் பரீட்சைக்குத் தோற்ற வேண்டிய கட்டாயம் இல்லை. இச்சுற்று நிருபம் அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதனால் மாணவர்களும் பெற்றோர்களும் பரீட்சைக்குத் தோற்றுவது குறித்து தமது விருப்பின் அடிப்படையில் தீர்மானத்தை மேற்கொள்ள முடியும். இது பாடசாலை மட்டத்தில் எவ்வித பிரச்சினையையும் ஏற்படுத்தாது," என்றும் அவர் விளக்கமளித்தார்.

எவ்வாறாயினும் குறிப்பிட்ட வருமான எல்லைக்குட்பட்ட குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களிலுள்ள கற்றலில் திறமைமிக்க மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்குவதற்கும் புதிய பாடசாலைகளில் தரம் ஆறுக்கு மாணவர்களை தெரிவு செய்வதற்கும் இப்பரீட்சை அவசியம் என்பதால் இவ்வாறான குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் இப்பரீட்சைக்குத் தோற்றுவது கட்டாயமென்றும் அவர் வலியுறுத்திக் கூறினார்.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்ட 1995/16 இலக்க சுற்றறிக்கையை இரத்துச் செய்து பரீட்சை அனைத்து மாணவர்களுக்கும் கட்டாயம் இல்லையெனத் தெரிவிக்கும் 08/2019 இலக்க சுற்றறிக்கையை கல்வி அமைச்சு வெளியிட்டு வைத்துள்ளது.

அந்த சுற்றறிக்கையில்," இதன் பின்னர் பாடசாலைகளில் ஐந்தாம் ஆண்டில் கல்வி கற்கின்ற புலமைப் பரிசிலிற்கு உரித்துடைய வருமான எல்லைக்கு உட்பட்ட, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் தவிர்ந்த ஏனைய சகல மாணவர்களையும் இப்பரீட்சைக்குத் தோற்றச் செய்வது கட்டாயமில்லை. இது தொடர்பில் மாணவர்கள் மீது எவ்விதத்திலும் அழுத்தம் செலுத்தப்படலாகாது என்பதையும் கவனத்திற் கொள்ள விரும்புகின்றேன்," என்றும் 08/2019 இலக்க சுற்று நிருபத்தில் கல்வியமைச்சின் செயலாளர் கூறியுள்ளார்.

அத்துடன் ,"மாணவர்களுக்கு தத்தமது விருப்பத்தின் பிரகாரம் புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றாதிருப்பதற்கு சந்தர்ப்பம் வழங்க முடிவதுடன், இது தொடர்பாக பெற்றோர்களுக்கு அறிவுறுத்தி பெற்றோரது ஒருமைப்பாடு தொடர்பான தகவல்கள் அடங்கிய ஆவணக் கோவை ஒன்றை பாடசாலையில் பேணுதல் வேண்டும்," என்றும் அந்த சுற்று நிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, "5 ஆம் தரத்துடன் நிறைவுபெறும் பாடசாலைகளில் கல்வி கற்கும் புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றாத மாணவர்களுக்கு 6ஆம் தரத்துக்கு பாடசாலையை பெற்றுக் கொடுப்பது வலயக் கல்விப் பணிப்பாளரின் பொறுப்பு," என்றும் செயலாளர் இங்கு குறிப்பிட்டுள்ளார்.
(இன்றைய தினகரன்)

Post a Comment

0 Comments