Header Ads

 • புதிய தகவல்கள்

  'குலேபகாவலி' - படம் எப்படி? #GulaebaghavaliReview

  பிரபுதேவா, ஹன்சிகா, ரேவதி, முனீஸ்காந்த் ஆகியோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் 'குலேபகாவலி'. இந்தப் படத்தை கல்யாண் இயக்கியிருக்கிறார். விவேக் - மெர்வின் இசையமைக்க, ஆர்.எஸ்.ஆனந்தகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். விஜய் வேல்குட்டி இப்படத்திற்கு படத்தொகுப்பாளராகப் பணியாற்றி இருக்கிறார். புதையல் தேடும் பயணத்தில் இறங்கும் பிரபுதேவா குழுவினர் சந்திக்கும் பிரச்னைகளையும், அவற்றின் பின்னணியையும் காமெடியாகச் சொல்லியிருக்கிறது 'குலேபகாவலி'. படம் எப்படி இருக்கிறது? வாங்க பார்க்கலாம்...

  1955-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான 'குலேபகாவலி' திரைப்படம் பெரும் வெற்றிபெற்றது. தனது தந்தைக்குப் பார்வை கிடைப்பதற்காக எம்.ஜி.ஆர் ஒரு மலரைத் தேடிப் பயணப்படுவதே இப்படத்தின் கதை. பிரபுதேவாவின் 'குலேபகாவலி'யில் விலைமதிப்புயர்ந்த பொருள் இருக்கும் பெட்டியைத் தேடி குலேபகாவலி எனும் ஊருக்குப் போகிறார்கள் பிரபுதேவா, ஹன்சிகா, ரேவதி மற்றும் முனீஸ்காந்த் ஆகியோர். அவர்கள் அந்தப் பெட்டியை எடுத்தார்களா, அதற்குள் விலைமதிப்புயர்ந்த பொருள் இருந்ததா என்பது கதை.

  1945-ம் ஆண்டு பிரிட்டிஷ்காரார்கள் சென்னையை விட்டு வெளியேறும்போது ஒரு துரை, வைரக்கல்கள் அடங்கிய பெட்டியை தமிழர் ஒருவரைத் தூக்கிக்கொண்டு வரச் சொல்கிறார். அப்படித் தூக்கி வரும்போது பெட்டி கீழே விழுந்து அதிலிருந்து வைரம் சிதற, அவற்றைக் கமுக்கமாக வேட்டியில் அள்ளிப்போட்டு ஒளித்துவைத்துவிட்டு, வெறும் கல்லை நிரப்பி பெட்டியை துரையிடம் கொடுத்து விடுகிறார். வைரத்தை ஒரு பெட்டியில் வைத்து 'குலேபகாவலி' எனும் ஊரில் கொண்டுபோய்ப் புதைத்து விடுகிறார் அவர். பின், அவரது குடும்பத்தினர் மெக்ஸிகோவுக்கு சென்று செட்டில் ஆகிவிடுகிறார்கள்.

  பிரபுதேவாவும், யோகிபாபுவும் மன்சூர் அலிகாலின் சிலை கடத்தல் தொழிலில் உதவி செய்பவர்கள். கிளப் டான்சர் ஹன்சிகா தங்கைக்காக சிறு சிறு,மோசடி செயல்களில் ஈடுபடுபவர். ரேவதி ஒரு மோசடி பேர்வழி. பணக்காரர்களை நூதன முறைகளில் ஏமாற்றி அவர்களது உடைமைகளைத் திருடிவிட்டுத் தப்பிச்செல்பவர். இன்ஸ்பெக்டராக வரும் சத்யன் சிறுவயதிலிருந்து யாரிடமாவது ஏமாந்து கொண்டேயிருக்கும் அப்பாவி. மோசடிப் பேர்வழிகள் அனைவரும் அவரவர் வழிகளில் சென்றுகொண்டிருக்கும்போது இவர்கள் அனைவரும் ஒரு இடத்தில் சந்தித்துக் கொள்கிறார்கள்.

  வில்லன் மத்சூதனன் ராவுக்கு 'குலேபகாவலி' எனும் ஊரில் தன் தாத்தா புதைத்து வைத்த பெட்டியைப் பற்றித் தெரிகிறது. இதனால், இந்தியாவுக்கு வரும் அவர் தன் மச்சான் ஆனந்தராஜோடு இணைந்து பெட்டியை எடுக்கத் திட்டமிடுகிறார். வித்தியாசமான மூடநம்பிக்கை கொண்ட மனிதர்கள் வாழும் குலேபகாவலி ஊரின் தலைவர் வேல.ராமமூர்த்தி. அந்தப் பெட்டியை எடுக்க, தங்களிடம் மாட்டிக்கொள்ளும் பிரபுதேவா, ஹன்சிகா மற்றும் முனீஸ்காந்தை குலேபகாவலிக்கு அனுப்புகிறார்கள் வில்லன் டீம். போகும் வழியிலேயே அந்த பெட்டியை எடுத்து தாங்களே பங்கு போட்டுக்கொள்ளலாம் எனத் தீர்மானிக்கிறார்கள் பிரபுதேவா குழுவினர்.

  குலேபகாவலிக்கு போகும் வழியில் ரேவதி கொள்ளையடித்து வரும் காரில் ஏறிக்கொள்ள, அவரும் இவர்களது திட்டத்தில் பார்ட்னர் ஆகிறார். இந்த கும்பலை, பிரபுதேவா கடத்திய சிலைகளைத் தேடி மன்சூர் அலிகானும், தங்களை ஏமாற்றிய ரேவதியைத் தேடி மொட்டை ராஜேந்திரன் மற்றும் சத்யன் ஆகியோரும் விரட்டுகிறார்கள். இவர்களைச் சமாளித்து பிரபுதேவா குழுவினர் குலேபகாவலிக்குச் சென்று அந்தப் புதையலை எடுத்தார்களா, அதனால் பலன் பெற்றார்களா, புதையலில் இருக்கும் மர்மம் என்ன என்பதெல்லாம் மீதிக்கதை.

  சிலை திருடும் காட்சிகளிலும், புதையல் தேடும் காட்சிகளிலும் எந்தப் பரபரப்பும் இன்றி தனது கேரக்டருக்கு ஏற்றபடி மிதப்பான நிலையிலேயே நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் பிரபுதேவா. பட்டர் பேபி ஹன்சிகா ஏமாற்றுக்காரியாக ஈர்க்கிறார். நடிகை ரேவதிக்கு 'ப.பாண்டி' படத்திற்குப் பிறகு செமத்தியான கேரக்டர். நிஜம் போல நம்பவைத்து திருடும் காட்சிகள், பொய்யாக சென்டிமென்ட் கதை சொல்வது என வித்தியாசமான தோற்றத்துடன் கெத்து காட்டியிருக்கிறார்.

  சீரியஸாக புதையலைத் தேடும் கதை என்றாலும் படம் முழுக்க காமெடிதான். பாட்ஷா காட்சியை ஸ்பூஃப் ஆக்கும் மன்சூர் அலிகான் - யோகிபாபு, அம்மா சென்டிமென்ட் ஸ்பூஃஃப் செய்யும் மொட்டை ராஜேந்திரன், ஆதரவற்ற குழந்தைகளை வளர்ப்பதாக கதையைக் கட்டும் ரேவதி, கொஞ்சமே கொஞ்சம் வில்லத்தனம் இருந்தாலும் எதைச் சொன்னாலும் நம்பும் அப்பாவி முனீஸ்காந்தின் பாவமான ரியாக்‌ஷன்ஸ் என படம் முழுக்க சிரிப்புக்கு குறையில்லை. விவேக் - மெர்வின் இசையில் 'குலேபா' பாடல் கவனம் ஈர்க்கிறது. பிரபுதேவாவின் டான்ஸ் பற்றிச் சொல்லவா ஏண்டும்? ஆனந்தகுமாரின் ஒளிப்பதிவில் குறையொன்றுமில்லை. 'சேராமல் போனால்' பாடலின் விஷுவல்ஸ் ரசிக்க வைக்கிறது. விஜய் வேல்குட்டியின் எடிட்டிங்கில் படத்தின் நீளம் கொஞ்சம் அதிகம் தான்.

  புதையல் தேடும் கதையை பயங்கர த்ரில்லாக இல்லாமல் காமெடி படமாக எடுத்திருக்கிறார் கல்யாண். படத்தின் முற்பாதியில் ஒவ்வொருக்கும் அறிமுகத்தைக் கொடுத்துவிட்டு, எல்லோரையும் ஒன்றாக இணைத்திருக்கிறார். கூட்டம் கூட்டமாக நடிகர்கள் இருப்பதே காட்சியை மனதோடு ஒட்டவிடவில்லை. ஆளுக்கொரு பக்கம் எதையாவது, யாரையாவது தேடிக் கொண்டேயிருப்பது படத்தை ரசிக்க விடாமல் குழப்புகிறது. புதையல் தேடும் கதையின் ஸ்பூஃப் வெர்சனாக இருக்கும் போல என நினைத்துப் பார்த்தால் புதையல் இருப்பதையும் உறுதி செய்கிறார்கள். மொத்தத்தில் த்ரில்லரும் இல்லாமல், ஸ்பூஃபும் இல்லாத காமெடி படம் 'குலேபகாவலி'. 'குலேபகாவலி' - ஜஸ்ட் காமெடிக்காக பார்க்கலாம்.

  No comments

  Post Top Ad

  Post Bottom Ad