Header Ads

  • புதிய தகவல்கள்

    ஆணைக்குழுவின் அறிக்ைக பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்

    திறைசேரி முறி விநியோக சர்ச்சை குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை நாட்டு மக்களுக்குப் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும். இந்த அறிக்கையிலுள்ள விடயங்களை இன்று (02) தகவல் அறியும் சட்டத்தின் ஊடாகக் கோரவிருப்பதாக ஜே.வி.பி அறிவித்துள்ளது.
    ஜனாதிபதி விசாரணை அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை நாட்டு மக்கள் அறிந்துகொள்ளவேண்டிய உரிமை உள்ளது. எனவே அரசாங்கம் உடனடியாக அறிக்கையிலுள்ள விடயங்களைப் பகிரங்கப்படுத்த வேண்டும் என ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். ஒரு விசாரணை அறிக்கை மூலம் ஏனைய விசாரணை அறிக்கைகள் மூடப்பட்டு விடக்கூடாது எனச் சுட்டிக்காட்டிய அவர், பாரிய மோசடிகளுடன் தொடர்புபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதுடன், ஏனைய மோசடிகள் குறித்த விசாரணை அறிக்கைகளும் வெளியிடப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.

    பலவத்தையிலுள்ள ஜே.வி.பியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.

    திறைசேரி முறி விநியோக மோசடி குறித்த விசாரணைகளை முன்னெடுப்பதில் ஜே.வி.பி பல வழிகளில் அழுத்தங் கொடுத்தது. கோப் குழுவின் அறிக்கை அரசாங்கத்தினால் சரியாக கவனத்தில் கொள்ளப்படாத நிலையில், ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அமைக்கப்பட்டு அதன் அறிக்கையும் தற்பொழுது ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு கையளிக்கப்பட்ட அறிக்கையில் உள்ள விடயங்கள் பொது மக்களுக்குப் பகிரக்கப்படுத்த வேண்டும்.

    நாளையதினம் (இன்று 02) ஜனாதிபதி செயலகத்துக்குச் ​சென்று தகவல் அறியும் சட்டத்தின் கீழ் திறைசேறி முறி தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ள விடயங்களை கோருவதற்கும் எதிர்பார்த்திருப்பதாக அவர் குறிப்பிட்டார். இந்த அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட்ட பின்னர் அடுத்த கட்ட செயற்பாடுகளில் எவ்வாறு அழுத்தம் கொடுப்பது என்பது தீர்மானிக்கப்படும். இந்த மோசடியுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.

    இது மாத்திரமன்றி பாரிய நிதி மோசடிகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவின் முன்னிலையில் தாக்கல் செய்யப்பட்ட பல முறைப்பாடுகளின் விசாரணைகள் பூர்த்தியடைந்துள்ளன. இவற்றின் அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ள போதும் அவை வெளியிடப்படவில்லை.

    ஒரு விசாரணை அறிக்கை மூலம் மற்றைய விசாரணைகளை மூடி மறைக்கும் சம்பிரதாயமொன்று கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பிரதாயத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு அரசாங்கம் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad