Header Ads

  • புதிய தகவல்கள்

    காசா பகுதி மீது இஸ்ரேல் மீண்டும் வான் தாக்குதல்

    காசாவில் உள்ள ஹமாஸ் பயிற்சி வளாகம் ஒன்றின் மீது இஸ்ரேல் நேற்று வான் தாக்குதல் நடத்தியுள்ளது. காசாவில் இஸ்ரேல் மீது ஞாயிறு இரவு ரொக்கெட் குண்டுகள் வீசப்பட்டதற்கு பதிலடியாகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.
    இஸ்ரேல் தலைநகராக ஜெரூசலத்தை அமெரிக்கா அங்கீகரித்ததை தொடர்ந்தே இரு தரப்புக்கும் இடையிலான இந்த பரஸ்பரம் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. எனினும் நேற்றைய தாக்குதலில் இரு தரப்பிலும் எந்த ஒரு உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை.
    அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் இஸ்ரேல் மற்றும் காசா எல்லையை கொண்ட அண்டை நாடான எகிப்துக்கு விஜயம் மேற்கொள்ள சில தினங்கள் இருக்கும் நிலையிலேயே அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது.
    பலஸ்தீனத்தின் காசா பகுதி ஹமாஸ் போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கிருந்து கடந்த இரண்டு வாரங்களில் தெற்கு இஸ்ரேல் மீது ஒரு டஜன் ரொக்கெட் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. 2014 ஆம் ஆண்டு ஏழு வாரங்கள் நீடித்த காசா யுத்தத்திற்கு பின்னர் இடம்பெற்ற அதிக ரொக்கெட் தாக்குதல்களாக இது உள்ளது.
    இந்நிலையில் ஞாயிறு பின்னேரம் வீசப்பட்ட இரு ரொக்கெட் குண்டுகளில் ஒன்று இஸ்ரேல் எல்லை பகுதியில் உள்ள சமூகம் ஒன்றுக்கு இடையில் விழுந்திருப்பதோடு மற்றையது திறந்த வெளிப்பகுதியில் விழுந்து வெடித்துள்ளது. திங்கட்கிழமை காலையில் வீசப்பட்ட மற்றொரு ரொக்கெட் இஸ்ரேலை அடையும் முன்னரே காசாவுக்குள் விழுந்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.
    இஸ்ரேலின் பதில் தாக்குதலில் ஹமாஸ் பயிற்சி முகாம் ஒன்றின் மூன்று கட்டுமானங்கள் தாக்கப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் கூறியது.
    பதற்றம் அதிகரிக்கும்போது ஹமாஸ் இவ்வாறான தனது தளங்களில் இருந்து வெளியேறுவது வழக்கமாகும். மறுபுறும் மோசமான மோதல் ஒன்று ஏற்படுவதை தவிர்க்க இஸ்ரேல் இவ்வாறான அதிக தாக்கம் செலுத்தாத சிறிய இலக்குகள் மீதே தாக்குதல் நடத்துகிறது.
    “இஸ்ரேல் மோதலை எதிர்பார்க்கவில்லை” என்று இஸ்ரேலின் நீதி அமைச்சர் அயெலத் ஷகெட் குறிப்பிட்டுள்ளார். எனினும் இந்த ரொக்கெட் தாக்குதல்கள் நிறுத்தப்படாவிட்டால் இஸ்ரேலின் பதில் தாக்குதல்கள் மோசமாக இருக்கும் என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரவையின் உறுப்பினரான சீவ் எல்கின் இஸ்ரேலிய வானொலியில் எச்சரித்துள்ளார்.
    காசாவில் இருக்கும் சிறு போராட்டக் குழு ஒன்றே இந்த ரொக்கெட் தாக்குதல்களை நடத்துவதாக இஸ்ரேல் அதிகாரிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
    இவர்களை கட்டுப்படுத்தும்படி ஹமாஸை இவர்கள் கோருகின்றனர். இதனை ஹமாஸ் செய்ய தவறினால் இஸ்ரேல் அந்த குழுவின் தலைமைகளை இலக்கு வைக்கும் என்று இஸ்ரேலிய அதிகாரிகள் மேலும் எச்சரித்துள்ளனர்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad