Header Ads

  • புதிய தகவல்கள்

    2018 பட்ஜட் ஒரே பார்வையில்... www.TRINCOINFO.com

     


     வடக்கு, கிழக்கிற்கு கூடுதல் நிதி, லயன்களுக்கு பதில் வீடுகள்

    வீடமைப்பு, மீள்குடியேற்றம், இளைஞர் மேம்பாடு மற்றும் சிறுபான்மை நலன் சார்ந்த திட்டங்களை மையமாகக் கொண்ட 2018 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
    நல்லாட்சி அரசாங்கத்தின் மூன்றாவது வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பித்த நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர பல எதிர்கால இலக்குகளை அடிப்படையாகக் கொண்ட யோசனைகளை முன்வைத்தார்.
    நீல - பசுமையை அடிப்படையாகக் கொண்ட இந்த வரவு செலவுத் திட்டத்தினூடாக தனிநபர் வருமானத்தை 5 ஆயிரம் டொலர்களாக அதிகரிக்க திட்டம் இருப்பதாக அமைச்சர் கூறினார்.

    நீலப்பசுமை பட்ஜட் 2 மணித்தியாலம் 35 நிமிடங்கள் உரையாற்றிய அமைச்சர் மங்கள

    நல்லாட்சி அரசாங்கத்தின் 2018ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. நீலப் பசுமை வரவு,செலவுத்திட்டம் 'என்டபிரைஸ் லங்கா 2018' என்ற தொனிப்பொருளில் நிதியமைச்சர் மங்கள சமரவீர இதனை நேற்று சபையில் சமர்ப்பித்திருந்தார்.
    நிதி அமைச்சராக நியமிக்கப்பட்ட மங்கள சமரவீர சமர்ப்பித்த முதலாவது வரவு,செலவுத்திட்டம் இதுவாகும். பிற்பகல் 3.10 மணி முதல் மாலை 5.45 மணிவரை சுமார் இரண்டு மணித்தியாலங்களும் 35 நிமிடங்களும் அமைச்சர் வரவுசெலவுத்திட்ட உரையை நிகழ்த்தினார்.
    பாராளுமன்றத்தின் கீழ் தளத்தில் செங்கம்பளம் விரிக்கப்பட்டிருந்ததுடன், நிதி அமைச்சர் மங்கள சமரவீர வரவு,செலவுத்திட்ட கோப்புக்களை எடுத்தவாறு செங்கம்பளத்தின் ஊடாக சபைக்குள் நுழைந்தார். சபையில் நுழைந்தபோது சபையிலிருந்த ஆளும்தரப்பு உறுப்பினர்கள் மேசையில் தட்டி அமைச்சரை வரவேற்றனர். சபாநாயகரின் அறிவிப்பு மற்றும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரின் ஒழுங்குப்பிரச்சினையால் ஏற்பட்ட சலசலப்புக்களைத் தொடர்ந்து நிதி அமைச்சர் மங்கள அமரவீர சபைக்குள் நுழைந்தார். சபைக்குள் நுழையும்போது ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரைப் பார்த்து கைகளை அசைத்த அமைச்சர், தனது கைகளில் கொண்டுவந்திருந்த கோப்புக்களை அவர்களின் பக்கமாக உயர்த்திக் காண்பித்தார். இதனால் சபையில் சிரிப்பொலி எழுந்தது.
    பிற்பகல் 3.10 மணிக்கு வரவு, செலவுத்திட்ட உரையை அமைச்சர் ஆரம்பித்தார். கடந்தகால வரலாறுகள் மற்றும் பொருளாதார நிலைமைகள் குறித்து அமைச்சர் சுருக்கமாகச் சுட்டிக்காட்டினார். அதேநேரம் தமது அரசாங்கம் கடந்தகாலத்தைப் பற்றி அதிகம் பேசிக்கொண்டிருக்காது, எதிர்காலம் குறித்தே அதிக அக்கறை கொண்டிருப்பதாகக் கூறினார். கடந்தகால மற்றும் நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்த தனது அறிமுக உரையை சுருக்கமாக முடித்துக் கொண்ட அமைச்சர் 3.25 மணிக்கு வரவு, செலவுத்திட்டத்தின் யோசனைகளை வாசிக்க ஆரம்பித்தார்.
    நாட்டின் பொருளாதாரத்தை சிறந்த நிலைக்குக் கொண்டுவருவதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்தியிருந்த முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கும் அமைச்சர் பாராட்டுக்களைத் தெரிவித்தார். அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிப்பது மற்றும் கடன்சுமையைக் குறைப்பது தொடர்பில் வரவு, செலவுத்திட்டத்தில் கவனம் செலுத்தியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
    சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலான வாகனப் பாவனைகள் குறைக்கப்படவிருப்பதுடன், 2040ஆம் ஆண்டாகும்போது இலங்கையிலுள்ள சகல வாகனங்களையும் 'ஹைபிரிட்' அல்லது இலத்திரனியல் வாகனங்களாக மாற்ற எதிர்பார்த்திருப்பதாகக் கூறினார். அரசாங்கத்தின் இந்தத் திட்டத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் தற்பொழுதே சைக்கிள்களுக்கு மாறியிருப்பதாக அவர் கூறினார். எம்பிக்கள் பாராளுமன்றத்துக்குள் சைக்கிளில் வந்தாலும் செல்லும்போது அவர்களுடைய பாதுகாப்பு அதிகாரிகளே அவற்றை செலுத்திச் சென்றதாகவும், எம்பிக்கள் திரும்பிச் செல்ல அவர்களின் சொகுசு வாகனங்கள் தற்பொழுது வந்திருப்பதாகவும் கூறினார்.
    தொடர்ந்தும் வரவு, செலவுத்திட்ட யோசனைகளை அமைச்சர் வாசிக்கும்போது ஆளும் கட்சி உறுப்பினர்கள் அவ்வப்போது மேசைகளில் தட்டி வரவேற்புத் தெரிவித்திருந்தனர். வடக்கு கிழக்கின் அபிவிருத்திகள், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான யோசனைகள் மற்றும் காணாமல்போனோர் அலுவலகத்தை அமைப்பதற்கும் நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக மங்கள சமரவீர தனது உரையில் குறிப்பிட்டார்.
    மாலை 5.45 மணிக்கு அமைச்சர் வரவு, செலவுத்திட்ட உரையை முடித்தார். சுமார் 2 மணித்தியாலங்களும் 35 நிமிடங்களிலும் அவர் வரவு, செலவுத்திட்ட உரையை நிறைவுசெய்தார். சபாநாயகர் கலரி பகுதியில் மாகாணசபையின் முதலமைச்சர்கள் சிலரும், வெளிநாட்டு இராஜதந்திரிகளும் அமர்ந்திருந்தனர். அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய விருந்தினர்கள் கலரி பகுதியில் அமர்ந்திருந்து வரவு, செலவுத்திட்டத்தை அவதானித்துக் கொண்டிருந்தனர்.
    வரவு, செலவுத்திட்டம் முன்வைக்கப்படுவதை முன்னிட்டு நேற்று பாராளுமன்றத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. நிதி அமைச்சின் அதிகாரிகள் வாகனத் தொடரணியில் பொலிஸ் பாதுகாப்புடன் பாராளுமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டதையும் காணக்கூடியதாகவிருந்தது.
    வரவு, செலவுத்திட்ட உரையைத் தொடர்ந்து பாராளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் சம்பிரதாய பூர்வமான தேனீர் விருந்துபசாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ஆளுங்கட்சி எதிர்க்கட்சி உறுப்பினர்கள், அரசாங்க அதிகாரிகள், அமைச்சின் செயலாளர்கள், இராஜதந்திரிகள் எனப் பலரும் கலந்துகொண்டு வரவு, செலவுத்திட்டம் தொடர்பில் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். இலங்கை வரலாற்றில் முதற் தடவையாக வரவு, செலவுத்திட்டம் முன்வைக்கப்படுவதற்கு முன்னர் பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்ட நிலையில் 2018ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டம் நேற்று சமர்ப்பிக்கப்பட்டது.
    இன்று முதல் வரவு, செலவுத்திட்டத்தின் விவாதம் ஆரம்பமாகும். இது எதிர்வரும் 16ஆம் திகதி வரை தொடரவிருப்பதுடன், 16ஆம் திகதி மாலை இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இடம்பெறும். நவம்பர் 17ஆம் திகதி முதல் டிசம்பர் 9ஆம் திகதி வரை குழுநிலை விவாதம் நடைபெற்று 9ஆம் திகதி மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடத்தப்படும்.


    சகலதரப்புக்கும் நன்மை பயக்கும் பட்ஜட்

    தமிழ் மக்கள் உட்பட சகல தரப்பினருக்கும் நன்மை பயக்கும் வகையில் அரசாங்கம் சமர்ப்பித்துள்ள வரவு,செலவுத் திட்டம் அமைந்திருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
    யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளிட்ட தமிழ் மக்களின் தேவைகள் மற்றும் சகல மக்களுக்கும் நன்மையை ஏற்படுத்தும் வகையில் அரசாங்கம் வரவு, செலவுத் திட்டத்தை தயாரித்திருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
    அரசாங்கம் முன்வைத்துள்ள இந்த வரவுசெலவுத்திட்டத்தில் உள்ளடக்கங்களை ஆழமாக அவதானிக்க வேண்டியிருப்பதாகவும் கூறினார்.  அதேநேரம் அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள வரவு, செலவுத்திட்டமானது தமிழ் மக்களுக்கு ஓரளவு நன்மை பயக்கும் வகையில் அமைந்திருப்பதாகவும், இதனை முழுமையாக நடைமுறைப்படுத்துவதன் மூலமே அதன் பயனை மக்கள் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். நல்லிணக்கத்தினை கட்டியெழுப்புவது உள்ளிட்ட விடயங்களில் கூட்டமைப்பு முன்வைத்திருந்த யோசனைகள் உள்வாங்கப்பட்டுள்ளன.
    முன்னாள் போராளிகளுக்கான மறுவாழ்வு, வேலைவாய்ப்பு, மாற்றுதிறனாளி பெண்களுக்கான வீடுகள், விதவைப் பெண்களுக்கான தேவைகள், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பினை கருத்திற்கொண்டு அவற்றுக்கான முதலீடுகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
    அரசாங்கம் முன்வைத்துள்ள இந்த யோசனைகள் தமிழ் மக்களுக்கு ஓரளவு பயனளிக்கும் வகையில் அமைந்திருப்பதுடன், இவற்றை முழுமையாக நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.








    No comments

    Post Top Ad

    Post Bottom Ad