முரளி பந்தை வீசி எறிவதாக குற்றம் சாட்டியவர் திருட்டு சம்பவத்தில் சிக்கிய டெரல் ஹெயார்
முன்னாள் அவுஸ்திரேலிய நடுவர் டெரல் ஹெயாருக்கு, அவுஸ்திரேலிய நீதிமன்றம் ஒன்றினால் 18 மாத (ஒன்றரை வருட) நன்னடத்தை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த நடுவர், தான் பணிபுரிந்த மதுபான கடையில் பணம் திருடியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதோடு, குறித்த குற்றத்தை தாம் ஒப்புக்கொள்வதாக எழுத்து மூலம் அறிவித்ததை அடுத்தே அவருக்கு குறித்த அவகாசத்தை வழங்குவதாக அவுஸ்திரேலிய நீதிமன்றம் இன்று (24) அறிவித்துள்ளது.
தான் பணிபுரிந்த மதுபான கடையில், இவ்வருடம் பெப்ரவரி முதல் ஏப்ரல் வரையான காலப் பகுதியில் அவுஸ்திரேலிய டொலர் 9,005.75 இனை அவர் திருடியுள்ளதாக அவர் ஒப்புக் கொண்டுள்ளதோடு, அத்தொகையை செலுத்தியுள்ள அவர், தனது நிறுவனத்திடம் எழுத்து மூலம் மன்னிப்பையும் கோரியுள்ளார்.
கடந்த 1992 - 2008 வரை 78 டெஸ்ட் போட்டிகளில் நடுவராக பணியாற்றியுள்ள டெரல் ஹெயார், தான் சூதாட்டத்திற்கு அடிமைப்பட்டுள்ளதாக ஒரேஞ்ச் உள்ளூர் நீதிமன்றில் எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
கடந்த 1995 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற போட்டித் தொடரில், இலங்கையின் நட்சத்திர சுழல்பந்துவீச்சாளர் பந்தை வீசி எறிவதாக, நடுவர் டெரல் ஹெயார் குற்றம் சுமத்தியிருந்தார்.
அத்துடன் கடந்த 2006 இல் இங்கிலாந்து அணிக்கு எதிராக இடம்பெற்ற நான்காவது போட்டியில் பாகிஸ்தான் அணி, பந்தை சேதப்படுத்துவதாக குற்றம் சுமத்தியதோடு, அப்போட்டியை பாகிஸ்தான் அணி பகிஷ்கரித்தது. இதனையடுத்து குறித்த போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
அது மாத்திரமன்றி சர்வதேச கிரிக்கெட் சபைக்கு எதிரதாக இன ரீதியான கருத்தை தெரிவித்தன் காரணமாக, இரண்டு வருடங்கள் டெஸ்ட் குழுவிலிருந்து (Test Panel) நீக்கப்பட்டு இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்தார். ஆயினும் இரண்டு வருடங்களின் பின்னர் மீண்டும் இணைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments