ஸ்மார்ட் தேசிய அடையாள அட்டை முதற்கட்டமாக நேற்று அறிமுகம் - Trincoinfo

புதிய தகவல்கள்

Post Top Ad

Post Top Ad

Sunday, October 29, 2017

ஸ்மார்ட் தேசிய அடையாள அட்டை முதற்கட்டமாக நேற்று அறிமுகம்


இலங்கையில் முதற்தடவையாக இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. ஸ்மார்ட் தேசிய அடையாள அட்டைகள் (smart National identity card) என அழைக்கப்படும் இவ் அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்வு நேற்று (27) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஏற்கனவே அடையாள அட்டைகளை வைத்திருப்பவர்கள் இந்த அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள வேண்டிய தேவையில்லை, தற்போதுள்ள தேசிய அடையாள அட்டை நல்ல நிலையில் இருந்தால் அவர்கள் புதிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை.
எதிர்வரும் காலங்களில் இலத்திரனியல் அடையாள அட்டைக்கான சட்டஒழுங்குகள் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் தற்பொழுது அமுலிலுள்ள அடையாள அட்டையை முற்றாக நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்
இந்த அடையாள அட்டையில் 12 இலக்கங்கள் காணப்படுகின்றன. சர்வதேச சிவில் விமான சேவை அமைப்பின் (international civil aviation organization – icao) தரத்திற்கு அமைவான படம் மற்றும் இயந்திரத்தினால் வாசிக்கக்கூடிய பார்குறியீடு என்பவும் பயன்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் பெயர், பிறந்த இடம், முகவரி மற்றும் பாலினம் போன்றன மும்மொழிகளிலும் அச்சிடப்பட்டுள்ளதுடன் அடையாள அட்டைக்கு சொந்தக்காரரின் கையொப்பமும் இவ்வடையாள அட்டையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக வடமேல் மாகாண அபிவிருத்தி மற்றும் உள்நாட்டு விவகார அமைச்சர் எஸ்.பி.நாவின்ன கலந்துகொண்டு புதிய ஸ்மார்ட் தேசிய அடையாள அட்டையை அறிமுகம் செய்துவைத்தார்.
அமைச்சர் நாவின்ன பேசும்போது தெரிவித்ததாவது,
தேசிய அடையாள அட்டையை மாற்றுவதற்கு அன்று சிறீமாவோ பண்டாரநாயக்க எவ்வளவோ முயற்சிகளை மேற்கொண்டும் இயலவில்லை. பாராளுமன்றத்தில் அடையாள அட்டையை மாற்றுவது தொடர்பான 8 முன்மொழிவுகள் இதவரையில் முன்வைக்கப்பட்டுள்ளன. அவையனைத்தும் கிடப்பில் போடப்பட்டன. கடந்த 2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் நல்லாட்சி அரசின் கீழ் அடையாள அட்டையின் மாற்றம் ஆரம்பிக்கப்பட்டது என்றும் தெரிவித்தார்.
மேலும், குறிப்பாக தேசிய அடையாள அட்டையின் தேவை நாட்டில் மாத்திரமல்லாமல் முழு உலகிலும் மேலோங்கியுள்ளது. புதிய அடையாள அட்டை மாற்றத்திற்கு தேசிய அரசென்ற ரீதியில் ஜனாதிபதியும் பிரதமரும் பாரிய ஒத்துழைப்பு வழங்கினார்கள் எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
அத்துடன் இந்த அடையாள அட்டை சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள தரத்துடன் உள்ளதுடன் இதன் மூலம் பொதுமக்கள் விரைவாகவும் இலகுவாகவும் தமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
நாம் கடந்த காலப்பகுதியில் வவுனியாவுக்கு சென்ற போது அங்குள்ள மக்கள் அடையாள அட்டை பெறுவதில் அதிக சிக்கல்களை எதிர்கொண்டு வருவதை காண முடிந்ததாகவும், அதனால் நாம் ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகத்துடன் பேச்சு நடத்தி இதை எவ்வாறு மாவட்ட ரீதியில் வழங்க முடியும் என்பதை பற்றி சிந்தித்தோம். அது கடினமான விடயம் என்றாலும் 2018 நவம்பர் மாதாகும் போது கட்டாயமாக மாவட்ட ரீதியில் இலத்திரனியல் அடையாள அட்டையை வழங்க வேண்டும் என நான் ஆலோசனை வழங்கியுள்ளேன் என்றும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages