Header Ads

 • புதிய தகவல்கள்

  ஸ்டேட் முதல் சென்ட்ரல் வரை வெளுத்து வாங்கிய விஜய்!- அரசியலுக்கு அடிக்கல்?  அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் பல தடைகளைக் கடந்து நேற்று வெளியானது 'மெர்சல்' திரைப்படம். ரசிகர்களின் பலத்த எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது 'மெர்சல்'.

  விஜய்யின் அரசியல் பிரவேசம் கடந்த சில வருடங்களாக எதிர்பார்க்கப்பட்டு வரும் சூழலில், மக்கள் நலனுக்கான அவரது பேச்சு ஒவ்வொரு மேடையிலும் கவனிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், 'மெர்சல்' படத்தில் விஜய்யின் அரசியல் பிரவேசம் பற்றிய ஏதாவது குறிப்பு தென்படும் என அவரது ரசிகர்களும், ஆதரவாளர்களும் எதிர்பார்த்தனர். அதை வெகுவாகப் பூர்த்தி செய்து க்யூரியாசிட்டி ஏற்றியிருக்கிறது 'மெர்சல்' படம்.

  மெர்சல் அரசியல்
   'மெர்சல்' படம் நேற்று வெளியான நிலையில், படத்தில் அரசுகளைக் கடுமையாக சாடியிருக்கிறார் விஜய். மெர்சல் படம் மருத்துவத் துறையில் நிகழும் மலினமான வியாபார நோக்கை உடைத்துக் காட்டுகிறது. மருத்துவம் என்பது மக்களின் அத்தியாவசியமான தேவையாகக் கருதப்பட வேண்டும் எனும் கருத்தை முன்வைக்கிறார் விஜய். இந்தப் படத்தில் விஜய் ஐந்து ரூபாய் டாக்டராக ஏழைகளுக்கு மருத்துவம் பார்ப்பவராக நடித்திருக்கிறார். தமிழன், தமிழ்ப் பண்பாடு என்கிற கருத்துகளை வழக்கத்தை விட அதிகமாகவே உச்சரித்திருக்கிறார் விஜய்.

  ஆளப்போறான் தமிழன்
   'மெர்சல்' படத்தின் ஆளப்போறான் தமிழன் பாடல் வெளியானபோதே சினிமா, அரசியல் களங்களில் பதற்றம் தொற்றிக்கொண்டது. விஜய்யின் முந்தைய படங்களில் இப்படியான தலைவன் புகழ்பாடும் பாடல்கள் இடம்பெற்றிருந்தாலும் தமிழக அரசியல் களத்தில் உருவாகியிருக்கும் வெற்றிடத்தை இந்தப் பாடல் இன்னும் கொஞ்சம் சூடேற்றியது. விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என திரைப் பிரபலங்கள் பலரும் கருத்து கூறியது இன்னும் பரபரப்பைக் கூட்டியது.

  இலவச மிக்ஸி, கிரைண்டர் 
  'மெர்சல்' படத்தில் தமிழக அரசைச் சாடி வசனம் பேசியிருக்கிறார் விஜய். 'இலவசமா டி.வி., மிக்ஸி, க்ரைண்டர் கொடுக்குற ஊர் இது. மருத்துவ வசதிகளை இலவசமா தர முடியாதா' என வசனம் பேசியிருக்கிறார் விஜய். 'அனைத்து அமைச்சர்கள், முதலமைச்சர், கவர்னர், எம்.எல்.ஏ, எம்.பிக்கள் எல்லோரையும் அரசு மருத்துவமனையில்தான் சேர்க்கணும்னு சட்டம் கொண்டுவந்தா, அரசு மருத்துவமனைகளின் தரம் தானாக உயரும்' எனவும் பேசி கைதட்டல் அள்ளுகிறார் விஜய்.

  மத்திய அரசுக்கு விளாசல் 
  '7 சதவீத ஜி.எஸ்.டி வாங்குற சிங்கப்பூரில் மருத்துவம் இலவசம். ஆனா, 28% ஜி.எஸ்.டி வசூலிக்கிற நம் நாட்டில் மருத்துவ வசதிகளை மக்களுக்கு இலவசமா தர முடியலை' என மத்திய அரசாங்கத்தின் இயலாத் தன்மையை வசனம் மூலம் சுட்டிக் காட்டுகிறார் விஜய். ஜி.எஸ்.டி வரிவிதிப்பு தொடர்பாக இன்னும் சில புள்ளிவிபரங்களையும் ரமணா பட பாணியில் சொல்கிறார் விஜய். அவரது வசனங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் ஆரவாரம் தெறிக்கிறது. சினிமாவுக்கு ஜி.எஸ்.டி-யை திரையுலகினர் எதிர்த்துவரும் சூழலில், 'மக்களைச் சீரழிக்கும் மதுபானத்திற்கு 8%, மருத்துவத்திற்கு 18% ஜி.எஸ்.டி எனக் கொந்தளித்திருக்கிறார் விஜய். இந்த வசனத்தின் மூலம் மத்திய அரசை நேரடியாகப் பொளந்திருக்கிறார் விஜய்.

  எம்.ஜி.ஆர் வழியில் 
  பிற நடிகர்கள் பலரும் தங்கள் படங்களில் ரஜினி ரெஃபரென்ஸை தான் அதிகமாகப் பயன்படுத்துவார்கள். இந்தப் படத்தில் ஃப்ளாஸ்பேக் காலகட்டம் எம்.ஜி.ஆர் காலம் என்பதால் எம்.ஜி.ஆர் ரெஃபரென்ஸை அதிகமாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள். எம்.ஜி.ஆர் திரையில் தோன்றும்போது அவரை இமிடேட் செய்யும் விதமாகவே என்ட்ரி தருகிறார் விஜய். எம்.ஜி.ஆரை முன்னிருத்தி விஜய் அரசியலுக்கு வருவதற்கான வாய்ப்புகள் இந்தப் படத்திலும் தெளிவாகத் தெரிகின்றன.

  எங்க கை ஓங்கும் 
  வில்லன் எஸ்.ஜே.சூர்யா, தளபதி விஜய்யைக் கொல்லும்போது, ரத்த வெள்ளத்தில் கீழே சரியும் விஜய், 'ஒருநாள் எங்க கை ஓங்கும்டா...' என ஒரு கையில் திருப்பிப் பிடித்த அரிவாளோடு முஷ்டியை உயர்த்திக் காட்டுகிறார். ஏழைகளின் ராஜ்ஜியம் தொடங்கும் என்பதற்கான் கம்யூனிச குறியீடாக இதை எடுத்துக் கொள்ளலாம். இளையதளபதி 'தளபதி'யாக ப்ரொமோஷன் அடைந்ததற்குக் காரணமும் அரசியல் ஆசையாகவே இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

  தலைமைச் செயலகம் 
  படத்தின் முடிவில் டைட்டில் கார்டு போடும்போது, தலைமைச் செயலகம் போன்ற மாதிரிக் கட்டிடத்தினுள் நுழைகிறார் விஜய். இதை அவர் அரசியலுக்கு வருவதற்கான சிம்பாலிக் ரெப்ரசென்டேஷ்னாக எடுத்துக்கொள்ளலாமா... இல்லை ரசிகர்களின் ஆரவாரத்திற்காகவும் படத்தின் வெற்றிக்காகவும் அட்லீ கையாண்ட உத்தியா என்பதை காலம்தான் தீர்மானிக்கும்.

  No comments

  Post Top Ad

  Post Bottom Ad