Header Ads

  • புதிய தகவல்கள்

    எல்லாளன் பற்றி மகாவம்சம் - 2




    எல்லாளன் இலங்கையை 44 ஆண்டுகள் ஆட்சிபுரிந்தான். இவனது நீதி தவறாத ஆட்சியைப் புகழ்ந்துரைக்கும் பாளி நூல்கள், இவர் தவறான மார்க்கத்தினை (இந்து மதத்தினை) தழுவியவன் எனவும் கூறப் பின் நிற்கவில்லை. இவன் தனது ஆட்சியில் பெளத்த மதத்திற்கு ஆதரவு அளித்த போதிலும், தன் பழைய மதநம்பிக்கையைக் கைவிடவில்லை என மகாவம்சம் கூறுகிறது. எல்லாளன் பகைவர்க்கும் நண்பர்க்கும் சமநீதி வழங்கியதாக கூறும் மகாவம்சம், அவனது நீதிநெறி தவறாத ஆட்சியை மனுநீதிச் சோழனின் கதைகளோடு இணைத்து விபரித்துள்ளது. எல்லாளனின் சயன அறையில் ஓர் ஆராய்ச்சிமணி கட்டப்பட்டிருந்தது. நீதி வேண்டுவோர் எந்த நேரமும் கோட்டைவாசலில் தொங்கும் கயிற்றினை இழுத்து இந்த மணியை ஒலியெழுப்பின் மன்னன் உடன் வந்து விசாரித்துத் துயர் தீர்ப்பான் எனவும் கூறுகிறது.



    மகாவம்சம் கூறுகின்ற ஒரு கதை எல்லாளன் பெளத்த மதத்தை ஆதரவளித்து போற்றிப்பாதுகாத்தான் என்பதையும் நிரூபிக்கின்றது. தன் தாய் மரணித்ததை அறிந்த எல்லாளன் தேரிலேறி சேத்தியகிரி நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, தேரின் அச்சு தாதுகோபமொன்றில் பட்டு தாதுகோபத்திற்குச் சேதத்தை ஏற்படுத்தியது. மன்னன் தேரினின்றும் கீழே குதித்து, தனது தலையை உடனடியாகச் சீவிவிடுமாறு, அமைச்சர்களிடம் கூறினான். 'தெரியாமல் நிகழ்ந்தது அமைதியடைக. தூபத்தைத் திருத்தி விடுவோம்' என்றனர் அமைச்சர்கள். பதினைந்து கற்களே சிதைவடைந்திருந்தன. அப்படியிருந்தும் அந்தத் தாதுகோபத்தை புனரமைக்க எல்லாளன் பதினையாயிரம் கஹாப் பணங்களைச் செலவிட்டதுடன் தன் தாயின் இறுதிக்கிரியைக்குச் செல்லாமல் தாதுகோபம் புனரமைக்கும் வரை அங்கேயே தங்கியிருந்தான்.

    எனினும் இதே விடயம் இனவெறியை தூண்டுவதற்காக விகாரைமகாதேவியால் பயன்படுத்தப்படுவதையும் மகாவம்சம் நியாயப்படுத்தி கூறுகின்றது. அதில் விகாரைமகாதேவி தன் மகன் துட்டகாமினியிடம் 'எல்லாளன் அங்கு (அநுராதபுரத்தில்) பெளத்தவிகாரைகளை தேரால் இடித்து தரைமட்டமாக்கிறான்' என கூறுவதாக கூறப்பட்டுள்ளது.


    விகாரைமகாதேவி.
    கல்யாணி இராசதானியின் மன்னன் களனிதீசனின் மகளே மகாதேவியாவாள். பின்னாளில் இவள் விகாரைமகாதேவி என அழைக்கப்பட்டாள். 
    விகாரைமகாதேவியின் தாயாரான களனிதீசனின் மனைவி சித்ததேவி களனிதீசனின் தம்பியாருடன் கள்ள உறவு கொண்டிருந்ததாக மகாவம்சம் கூறுகிறது. பின்னாளில் எல்லாளனின் தோல்விக்கு விகாரைமகாதேவியே மிக முக்கிய காரணமாகிறாள். 
    எல்லாளனின் வலுவான கோட்டையொன்றிற்கு பொறுப்பாகவிருந்த தளகர்த்தன் ஒருவனுடன் தன் உடலழகை காட்டி தவறான உறவுக்கு அழைத்துச்சென்று துட்டகாமினியின் சேனைகள் அக்கோட்டையை தாக்குவதற்கு வழி சமைத்துக்கொடுக்கிறாள். 
    இதை மகாவம்சம் போர்த்தந்திரோபாயம் என வர்ணிக்கிறது. 
    இவ்வாறு பெண்களின் ஆடவர்களுடனான தவறான உறவுகளும் மன்னர்கள் பல திருமணங்கள் செய்வதையும் நியாயப்படுத்தி கூறும் மகாவம்சம் பெளத்த மக்களை ஆரம்பகாலம் முதலே தவறாக வழிநடத்தியுள்ளதெனலாம்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad